காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆளும் தரப்பின் முக்கிய தலைவரின் வாகனத்தை பின்தொடர்ந்து சென்று தாக்குதல்!

0
164

சிறிலங்கா ஆளும் தரப்பு தொழிற்சங்க தலைவரின் வாகனத்தை பின்தொடர்ந்து சென்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தாக்குதலுக்குள்ளானவர், அரச பத்திரிகை நிறுவனமான லேக் ஹவுஸ் நிறுவனத்தின் பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்க தலைவர் சந்தன பண்டார எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் தனது சமூக வலைத்தள பக்கதில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவரது பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

கொழும்பு காலி முகத் திடலில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தனது காரை பின் தொடர்ந்து வந்து தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

இரவு 12 மணியளவில் தான் தனது தனிப்பட்ட காரில் கொள்ளுப்பிட்டியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி சென்ற போது இந்த சம்பவம் நடந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

காரை தாக்கிய பின்னர், அதனை புரட்டி போடவும் ஆர்ப்பாட்டகாரர்கள் முயற்சித்தனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி, மக்கள் தொடர்ந்தும் 5 வது நாளாகவும் காலி முகத் திடலில் அரச தலைவர் செயலகத்திற்கு எதிரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள், யுவதிகள், முதியவர்கள், இன, மத, கட்சி பேதங்கள் இன்றி கலந்து கொண்டுள்ளதாக அதில் கலந்து கொண்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.