இலங்கை அரசின் முட்டாள்தனமான செயலால் ஏற்பட்டுள்ள விபரீதம் : பேராசிரியர் கடும் எச்சரிக்கை

0
393

வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துவதை இடைநிறுத்துவதற்கு இலங்கை எடுத்த தீர்மானம் முன்னரே எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் பேராசிரியர் அனுரகுமார உத்துமங்கே தெரிவித்துள்ளார்.

தேவையான முடிவுகளை எடுப்பதில் தாமதம் ஏற்படுவதால் நாட்டு மக்கள் பல பொருளாதார பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். சரியான விடயத்தை சரியான நேரத்தில் எடுத்திருக்க வேண்டும். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னரே பொருளாதார நிபுணர்கள் நாட்டின் நிலைமை தொடர்பில் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தினோம்.

அரசியல் காரணங்கள் பேசி அதனை தாமதப்படுத்தினார்கள். குறைந்தப்பட்சம் இறுதி நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த தீர்மானம் குறித்து மகிழ்ச்சியடையலாம். எனினும் அது மிகப்பெரிய தாமதமான முடிவாகவே உள்ளது. மக்கள் கடுமையான நிலைமைக்கு முகம் கொடுத்துவிட்டனர்.

தற்போது மருந்துகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கடும் நெருக்கடி நிலையை சந்தித்து வருகின்றோம். இன்னும் பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்த நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கான வெளிநாட்டுக் கடன்களை செலுத்துவதை இடைநிறுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. நாட்டின் மட்டுப்படுத்தப்பட்ட வெளிநாட்டு கையிருப்பை அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருள் இறக்குமதிக்கு பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.