அடுத்த அரச தலைவர் யார்? சூடு பிடித்துள்ள அரசியல் களத்தில் சந்திரிகா குமாரதுங்க!

0
640

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அதனாலேற்பட்டுள்ள கட்டுக்கடங்காத விலையேற்றம் காரணமாக மக்கள் தன்னெழுச்சியாக  நிகழ்த்தும் ஆர்ப்பாட்டம் காரணமாக இலங்கை அரசியல் குழம்பிப் போய் உள்ளது.

அரசின் அமைச்சர்கள் பதவி விலகல், அரச தலைவரை பதவி நீக்குவதா இல்லையா என்ற வாதப்பிரதிவாதங்கள் என கொழும்பு அரசியல் நாளுக்கு நாள் சூடு பிடித்த வண்ணமே உள்ளது.

எனினும் மக்கள் எதிர்நோக்கும் வாழ்க்கை பிரச்சினைக்கு இதுவரை எந்த தீர்வும் எவராலும் முன்வைக்கப்படவில்லை.

இந்த நிலையில் அரசாங்கத்தை எதிர்க்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள், குழுக்களுடன் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க நேற்றையதினம் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் குமாரவெல்கம, சம்பிக்க ரணவக்க , அனுரபிரியதர்சன யாப்பா, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உட்பட பலரை முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

அரசாங்கத்தை எதிர்க்கும் கட்சிகள் மத்தியில் முன்னோக்கி நகர்வது குறித்து மாற்றுக்கருத்துக்கள் உள்ளதால் முன்னுரிமையளிக்கவேண்டிய விடயங்களை அடையாளம் காண்பதற்காக குழுவொன்றை நியமிக்குமாறு முன்னாள் அரச தலைவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

எனினும் அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ள கட்சிகள் அரச தலைவரை பதவி நீக்குவதற்கு விரும்பவில்லை,அரச தலைவர் பதவி விலகினால் அமைச்சரவை கலைக்கப்பட்டால் அடுத்த தலைவர் யார் என்பது குறித்தும் அவர்கள் மத்தியில் கருத்துடன்பாடு இல்லை.

இதன்காரணமாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய்வதற்காக குழுவொன்றை அமைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.