எரிபொருள் எரிவாயு மற்றும் மின்சார நெருக்கடிகளுக்கு தீர்வுகண்டால் மக்கள் போராட்டம் தீரும்: ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச பொறுப்பேற்க மறுப்பு

0
154

எரிபொருள் எரிவாயு மற்றும் மின்சார நெருக்கடிகளுக்கு தீர்வுகண்டால் மக்களின் போராட்டங்கள் நி‍றைவு பெற்றுவிடும். ஆனால் ஜனாதிபதி பதவி விலகமாட்டார். எந்த நெருக்கடியானாலும் அது அரசியலமைப்புக்கு உட்பட்டே தீர்க்கப்படவேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமைச்சரவை பதவி விலகினால் எம்மால் 113 ஐ க்காட்டி ஆட்சி நடத்த முடியும் என சிலர் கூறினர். அதற்கு சந்தர்ப்பம் அளிக்கவே நாம் விலகினோம்.

நாம் தொடர்ந்து அந்த அழைப்பை விடுத்து வந்தோம். அதாவது யாரிடம் 113 பெரும்பான்மை இருக்கின்றதோ அவர்கள் ஆட்சி அமைக்கலாம். நாம் இதனை தனிப்பட்ட ரீதியில் கூட கோரிக்கையாக விடுக்கின்றோம்.

ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச என பலருக்கும் நாம் இதனை கூறியுள்ளோம். ஆனால் அவர்கள் இதனை நிராகரித்து விட்டனர். எவரும் முன்வரவில்லை. எனவே அரசியலமைப்பின்படி அரசை காப்பாற்றவேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.