விடுதலைப் புலிகள் மீளுருவாக்க விவகாரம் – 4 இந்தியர்களின் சொத்துக்கள் முடக்கம்

0
156

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை புத்துயிர் பெறச்செய்ய, போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நான்கு இந்தியர்களின் சொத்துக்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்களது வீடுகள், வாகனங்கள், பணம் உள்ளிட்ட 359 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை இந்திய அமுலாக்க பிரிவு பறிமுதல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த செய்திக்குறிப்பில்,

கடந்த ஆண்டு மார்ச் 18 ஆம் திகதி இந்திய கடற்பரப்பில் கடலோர காவல்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட இலங்கை படகில் இருந்து 300 கிலோ போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்ட நிலையில், இவ்வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது.

படகில் கடத்தப்பட்ட போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள், சுரேஷ் ராஜ், சற்குணம் மற்றும் அவர்களது நண்பர்களுக்காகவும், அந்த போதைப்பொருள் விற்பனையின் ஊடாக வருமானம் பெற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த வருமானத்தில் மேலதிக போதைப் பொருள்களை வாங்குவதற்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை புத்துயிர் பெறச்செய்வதற்காகவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளமையும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

சுரேஷ் ராஜ், சற்குணம் ஆகியோர் முன்பு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் என்றும், சௌந்தரராஜன் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் இருப்பதாக அச்செய்தியில் கூறப்பட்டுட்டுள்ளது.