கனடாவில் வேலைவாய்ப்புக்கு செல்பவர்களுக்கு புதிய விதிகள் அறிமுகம்

0
177

கனடாவில் பணியாளர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவும் நிலையில், தற்காலிக வெளிநாட்டுப் பணியார்களை எளிதில் பணிக்கமர்த்தும் வகையில், கனடா சில புதிய விதிகளை ஏப்ரல் 4ஆம் திகதி அமுல்படுத்தியுள்ளது.

கனடாவில் நிலவும் பணியாளர்கள் தட்டுப்பாட்டைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளில் ஒன்று, காலியிடங்களை நிரப்ப, கனேடியர்கள் கிடைக்காத இடங்களை, தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களைக் கொண்டு நிரப்புவது. இந்த தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள் திட்டத்தில்(Temporary Foreign Worker Program – TFWP) ஐந்து முக்கிய மாற்றங்கள் உடனடியாகக் கொண்டுவரப்பட உள்ளன. அவையாவன:

தொழிலாளர் சந்தை தாக்க மதிப்பீடு (Labour Market Impact Assessments – LMIAs) செல்லத்தக்க காலகட்டம், ஒன்பது மாதங்களிலிருந்து 18 மாதங்களாக உயர்த்தப்படுகிறது.

உயர் ஊதிய மற்றும் அதிக திறன் வாய்ந்த வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான (High-Wage and Global Talent Stream workers) அதிகபட்ச பணிக்காலம், இரண்டு ஆண்டுகளிலிருந்து மூன்று ஆண்டுகளாக நீடிக்கப்படுகிறது.

இவை போக, 2015ஆம் ஆண்டு முதல், நடைமுறையில் இருந்துவரும் Seasonal Cap Exemption, நிரந்தரமாக்கப்பட உள்ளது. அதாவது, பழங்கள் மற்றும் காய்கறிப் பண்ணைகளில் வேலை, மீன் பண்ணைகளில் வேலை போன்ற, சீஸன்களில் மட்டும் செய்யப்படும் குறைந்த ஊதிய வேலைகளுக்கான காலியிடங்களுக்கு, இனி இத்தனை தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களுக்குத்தான் வேலை என்ற கட்டுப்பாடு கிடையாது. அத்துடன், பணிக்காலமும், ஆண்டொன்றிற்கு 180 நாட்களிலிருந்து 270 நாட்களாக உயர்த்தப்படுகிறது. ஏப்ரல் 30 முதல் மேலும் சில விதிகள் அமுலுக்கு வருகின்றன.

அதிக அளவில் பணியாளர்கள் தட்டுப்பாடு உள்ளது என்பதை நிரூபித்துக்காட்டும் துறைகளில், பணி வழங்குவோர், ஆண்டொன்றிற்கு தங்கள் பணியாளர் தேவையில் 30 சதவிகிதத்தை, குறை ஊதிய தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களைக் கொண்டு நிரப்பிக்கொள்ளலாம். உணவு உற்பத்தி, மரப்பொருட்கள் மற்றும் அவை தொடர்பான பொருட்கள் தயாரிப்பு, தங்குமிடம் மற்றும் உணவு சேவைகள், கட்டுமானத்துறை, மருத்துவமனைகள் மற்றும் செவிலியர் மற்றும் முதியோர் சேவை ஆகிய துறைகள், இந்த விதிமுறைக்குத் தகுதி பெற்றவை ஆகும்.

கடைசியாக, 6 சதவிகிதம் மற்றும் அதற்கு அதிக அளவில் வேலையின்மை வீதம் நிலவும் பகுதிகளில், தங்குமிடம் மற்றும் உணவு சேவை, மற்றும் சில்லறை வர்த்தகம் தொடர்பான குறை ஊதிய பணிகளில், தானாக தொழிலாளர் சந்தை தாக்க மதிப்பீடு விண்ணப்பங்களை ஏற்க மறுக்கும் தற்போதைய கொள்கையை கனடா முடிவுக்குக் கொண்டு வர உள்ளது.

ஆண்டொன்றிற்கு 50,000 முதல் 60,000 வெளிநாட்டு விவசாயப் பணியாளர்கள் கனடாவில் பணி செய்ய வருகிறார்கள். அவ்விதம் பணிக்கு வரும் வெளிநாட்டுப் பணியாளர்களில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள் திட்டம் மூலமாகத்தான் கனடாவுக்கு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.