பிரதமர் மகிந்த ராஜபக்ச மீது மக்கள் விடுதலை முன்னணி குற்றச்சாட்டு

0
65

பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது உரையின் மூலம் நாட்டு மக்களுக்கு எந்தவொரு தீர்வினையும் முன்வைக்கவில்லையெனவும் தற்போதைய பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சித்துள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.

30 வருட கால யுத்தத்தின் போது கூட அத்தியாவசியப் பொருட்களுக்கான பற்றாக்குறைகள் ஏற்படவில்லையென மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இன்றைய ஊடக சந்திப்பின்போது தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“பிரதமர் தனது உரையின் மூலம் நாட்டுக்கு எந்த தீர்வினையும் முன்வைக்கவில்லை. வேறுபல விடயங்களை தெரிவித்து நாட்டில் தற்போது காணப்படும் உண்மையான பிரச்சினையிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கு முயற்சி செய்துள்ளார்.

பிரதமர் தனது உரையின்மூலம் நாட்டுக்கு தீர்வை முன்வைப்பாரென அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் 60 வருடகால அரசியல் அனுபவம் உள்ளதாக தம்பட்டம் அடிக்கும் பிரதமர், எந்தத் தீர்வையும் முன்வைக்கத் தவறியுள்ளார்.

பிரதமர் மாகாணசபை உறுப்பினர் போன்று உரையாற்றியுள்ளமை துரதிஷ்டவசமானது. பிரதமர் முதிர்ச்சியற்ற தன்மையை வெளிப்படுத்தி நிற்கின்றார்.

பிரதமரின் உரையில் மூன்று விடயங்கள் மாத்திரமே இடம்பெற்றிருந்தன. 30 வருட மோதல், கொரோனா தொற்று, 1988 – 1989 ஆண்டுகளில் இடம்பெற்ற வன்முறைகள் ஆகும்.

யுத்தம் முடிவடைந்து 13 ஆண்டுகள் கடந்துவிட்டன. 1988 – 1989 இல் காணப்பட்ட விடயங்கள் தற்பொழுதும் காணப்படுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

மின்வெட்டு, அத்தியாவசியப் பொருட்களுக்கான பற்றாக்குறைகள் 30 வருட யுத்தத்தில் கூட காணப்படவில்லை. அரசாங்கத்தின் தொலைநோக்கற்ற முடிவுகளால் மக்கள் இந்த நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்” என்றார்.