இலங்கை மின்சார சபைக்கு நுகர்வோர் செலுத்தத் தவறிய வரியினால் நிதிநெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மின்சார சபை!

0
69

இலங்கை மின்சார சபைக்கு நுகர்வோர் செலுத்தத் தவறிய தொகை 48 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர்.ரணதுங்க தெரிவித்தார்.

தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக மின்சாரசபை ஒப்பந்ததாரர்கள் மற்றும் தனியார் மின் உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவுகள் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும், தனியார் மின் உற்பத்தியாளர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொது முகாமையாளர் தெரிவித்தார்.

நிதி நெருக்கடி காரணமாக இம்மாதம் சம்பளம் வழங்குவதற்கு மினசாரசபை ஊழியர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளதாகவும், சபையின் செயற்பாடுகளுக்காக 25 பில்லியன் ரூபா வங்கிக் கடனாகப் பெற வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மின்சாரத்திற்காக நுகர்வோர் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை எல்எம்ஜி மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான செலவிற்கு சமமானது என்றும் அவர் கூறினார். சில மாதங்களுக்கு முன்னர் இந்த நிலுவைத் தொகை 45 பில்லியன் ரூபாவாக இருந்ததாக இலங்கை மின்சார சபை கூறுகிறது.

பொதுமக்கள் தங்களின் நிலுவைத் தொகையை அடுத்த சில நாட்களில் தாமதமின்றி வழங்குமாறு இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.