உக்ரைன் ரஷ்யா போர் தொடரும் நிலையில்; ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்! 39 பேர் பலி

0
162

உக்ரைனின் தொடருந்து நிலையம் ஒன்றின் மீது ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் அங்கு கூடியிருந்த 39 இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் மீதான இந்தத் தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றும் ரஷ்யாவின் கனவு, உக்ரைன் படைகளின் பலத்த எதிர்ப்பால் தோல்வியடைந்த போதிலும் ரஷ்யா தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

தற்போது கிழக்கு உக்ரைனை கைப்பற்றுவதில் ரஷ்யா கவனம் செலுத்திவருகிறது. இந்நிலையில் உக்ரைனில் இருந்து வெளியேற மக்கள் காத்திருந்த தொடருந்து நிலையம் மீது ரஷ்யா 2 ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

மக்களை வெளியேற்றுவதற்கு முக்கிய தலமாக செயற்பட்டுவந்த டொன்பாஸ் பகுதியில் உள்ள கிராமடோர்ஸ்க் தொடருந்து நிலையத்தின் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் 39இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாகவும், 100இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.