இலங்கைக்கு உதவி செய்யும் அவுஸ்திரேலியா அரசாங்கம்

0
756

இலங்கையில் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த 2.5 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய அரசாங்கம், ஐ.நாவின் உலக உணவுத் திட்டம், உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியவற்றின் ஊடாக இந்த நிதி வழங்கப்படவுள்ளதாக கூறியுள்ளது.

கொவிட்-19 தொற்றுநோய் உலகளவில் உணவுப் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள அதேவேளை, உணவு விநியோகச் சங்கிலியை பாதித்துள்ளதால் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்க வழி ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் மரிஸ் பெய்ன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இலங்கையில் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த 2.5 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் வழங்கப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தைகளின் ஊட்டச்சத்தை ஆதரிக்கவும் சிறு விவசாயிகளின் உற்பத்தியை வலுப்படுத்தவும் மற்றும் கிராமப்புறங்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

ஐ.நாவின் உலக உணவுத் திட்டம், உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியன விவசாய நடைமுறைகளை மேம்படுத்தவும், சந்தை இணைப்புகளை வலுப்படுத்தவும், பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு, குறிப்பாக பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்கவும் செயற்பட்டுவருகின்றன.

உலக உணவுத் திட்டமானது, பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகளின் உடனடி ஊட்டச்சத்து தேவைகளை பாடசாலைகளில் உணவு வழங்குவதன் மூலம் நிவர்த்தி செய்யும் என்பதுடன், உணவு மற்றும் விவசாய அமைப்பானது பாடசாலை தோட்ட திட்டத்திற்கான ஆதரவை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோ-பசிபிக் பகுதியில் சுகாதார பாதுகாப்பு மற்றும் பொருளாதார பின்னடைவு விடயங்களில் தமது நாடு பிராந்திய பங்காளிகளுடன் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றும் எனவும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.