நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க விரைவில் சட்டமூலம்

0
138

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிப்பதற்காக விரைவில் நாடாளுமன்றத்தில் சட்டமூல யோசனை ஒன்றை கொண்டு வரவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை வைத்துக்கொண்டு முன்நோக்கி செல்ல முடியுமா என்பது கேள்விக்குரி எனவும் தற்போதைய ஜனாதிபதியே நாடாளுமன்றத்தை பலவீனப்படுத்தியதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். நாம் மூன்று நாட்களாக நாடாளுமன்றத்தில் தீர்வை தேடிக்கொண்டிருக்கின்றோம்.

நெருக்கடியை ஏற்படுத்தியது நாங்களா என்று கேள்வி எழுப்ப விரும்புகிறேன். எதிர்காலத்தில் உணவு நெருக்கடி ஏற்படும் என நீங்கள்(சபாநாயகர்) கூறினீர்கள். தன்னிச்சையாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி இரசாயன பசளுக்கு தடைவிதித்ததே இதற்கு காரணம்.

இதன் காரணமாக அறுவடை 50 வீதமாக குறைந்து போனது. 2019 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும் ஜனாதிபதி என்ன செய்தார். 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள், பிரதமர், சபாநாயகர் மற்றும் நாடாளுமன்றத்திற்கு பகிரப்பட்டிருந்தது.

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவிக்கு வந்த பின்னர், அனைத்து அதிகாரங்களையும் தனக்கு கீழ் கொண்டு வந்தார். இதன் மூலம் நாடாளுமன்றம் பலவீனமடைந்து செல்லா காசமாக மாறியது.

நாடாளுமன்றத்தை பலவீனப்படுத்தி விட்டு நாடாளுமன்றத்திடம் தற்போது தீர்வை கேட்கிறார். நாங்கள் பிரச்சினையை தீர்த்து விட்டோம் என்று வைத்துக்கொள்வோம். ஜனாதிபதி தீர்வை நடைமுறைப்படுத்தலாம் அல்லது நடைமுறைப்படுத்தாலும் இருக்கலாம் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.