ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை தடுக்க ஆலோசனை

0
103

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எமக்கு தருவீர்கள் என்றால் நெருக்கடி நிலைமைகளை சமாளிக்க எம்மாலான முயற்சிகளை எடுப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva )தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(8 ) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

“ நாட்டின் நெருக்கடி நிலைமையை சமாளிக்க வேண்டும் என்றால் நிறைவேற்று அதிகாரத்தை நீக்க வேண்டும்.

ஆனால் அதற்கு இப்போது கால அவகாசம் இல்லை என்பதால் 20ஆம் திருத்தத்தை நீக்கி 19 ஆம் திருத்தத்தை கொண்டு வாருங்கள்.

சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதா? இல்லையா? என்ற கொள்கை முரண்பாடொன்று நாட்டில் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்ல வேண்டும் என்பதே இன்று சகலரதும் கருத்தாக உள்ளது.

அதேபோல் கடன் மீள் கட்டமைப்பைக் கையாள வேண்டும். இவற்றை நீண்ட காலமாக நாம் கூறிக்கொண்டுள்ளோம். லெபனானை உதாரணமாக எடுத்துகொள்ள முடியும். அவர்களும் இதே போன்றதொரு நெருக்கடியையே சந்தித்தனர்.

ஆகவே இப்போது நாம் செய்ய வேண்டியதென்ன, முதலில் வருமானத்திற்கும் செலவுக்கும் இடையிலான இடைவெளியை குறைக்க வேண்டும்.

வரி திருத்தங்களை மேற்கொண்டு வருமானத்தை அதிகரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நிதிச்சந்தையின் நிர்வாகத்தை மீண்டும் கையில் எடுக்க வேண்டும்.

நாட்டில் ஆறு வீதமாக இருந்த கொள்கை வட்டி வீதத்தை இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டும். இப்போது 6.5 வீதமாக இருக்கின்ற கொள்கை வட்டி வீதத்தை 12-13 வீதமாக்க வேண்டும்.

இல்லையேல் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை தடுக்க முடியாது. இது குறித்து ஆழமாக சிந்தியுங்கள். உடனடியாக இதனை நடைமுறைப்படுத்த முடியும் என்றால் அதுவும் ஆரோக்கியமானது” என்றார்.