இலங்கை வரலாற்றில் மோசமான சித்திரைப் புத்தாண்டு! முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச எச்சரிக்கை

0
331

இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான சித்திரைப் புத்தாண்டை இம்முறையே மக்கள் கொண்டாடவுள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

நாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. இன்று எரிபொருள் இன்றி பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அத்தோடு, பிரதமர் உள்ளிட்ட தற்போதைய அமைச்சரவையை முழுமையாக அகற்றிவிட்டு, சர்வ கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாங்கமொன்றை நிறுவ வேண்டும் என குறிப்பிட்டார்.

மக்களின் நம்பிக்கையை வெல்லக்கூடிய அரசாங்கமொன்றே தற்போது அவசியம். நிதியமைச்சராக செயற்பட்ட பசில் ராஜபக்ஷவின் செயற்பாடுகளே இந்த நிலைமைக்கு பிரதான காரணம், அவரால் மக்கள் நம்பிக்கையை வெல்ல முடியாமல் போயுள்ளது.

அத்துடன் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை “இரட்டைக் குடிமகன், அசிங்கமான அமெரிக்கன்” என மேற்கோள் காட்டி விமர்சிக்கவும் அவர் மறக்கவில்லை.

இந்த நேரத்தில் முழு நாடும் எம்மை நோக்கியே பார்த்துக்கொண்டிருக்கிறது. எம்மால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாதா, ஏன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி இந்த பிரச்சினைக்கு தீர்வு காணாமல் இருக்கிறார்கள் என்று மக்கள் நினைப்பதாகவும் விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்.

இந்த நெருக்கடியில் கால்பந்தாட்டம் விளையாட யாரும் நினைக்க வேண்டாம். நாடு மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது. நாம் எல்லோரும் ஒன்றுகூடுவோம். நாடு பற்றி சிந்திப்போம், நமது நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவோம்.

இந்த நேரத்தில் சுய இலாபத்திற்காக செயற்படாமல், நாட்டிற்காக செயற்படுவோம் எனவும் விமல் வீரவன்ச எம்.பி தெரிவித்தார்.