இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது நாளை வாக்கெடுப்பு: பாகிஸ்தானில் இம்ரானின் ஆட்சி வீழ்ச்சி!

0
622

பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது நாளை 9ஆம் திகதியன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

அந்த நாட்டின் உயர்நீதிமன்ற உத்தரவின்படி இந்த வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. இந்தநிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லுபடியாகாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசாங்கத்துக்கு தோழமை கட்சிகள், தமது ஆதரவை விலக்கிக்கொண்டமையை அடுத்து கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது கடந்த 3-ஆம் திகதியன்று வாக்கெடுப்பு இடம்பெறவிருந்தது.

எனினும் துணை சபாநாயகர் காசிம் சூரி அதனை நிராகரித்தார்.

இதனையடுத்து இம்ரான்கானின் பரிந்துரையால் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி ஆரிப் ஆல்வி உத்தரவிட்டார்

இதனையடுத்து அந்த நாட்டில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணை நான்கு நாட்கள் இடம்பெற்று தீர்ப்பு, நேற்று வெளியிடப்பட்டது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்த அதிபர் ஆரிப் ஆல்வியின் நடவடிக்கை சட்ட விரோதமானது என்று நீதியரசர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் நாடாளுமன்றத்தை 9-ந் திகதி கூட்டுவதற்கான அறிவிப்பை வெளியிடுமாறு சபாநாயகர் ஆசாத் காசியருக்கு அவர்கள் உத்தரவிட்டனர்.

இந்தநிலையில் 9ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு இம்ரான்கான் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளனர்.