விவசாயத்தில் சேதன உரத்தைப் பயன்படுத்தி உரிய விளைச்சலைப் பெற முயற்சி செய்ய, வலியுறுத்திய மாவட்ட அரச அதிபர் க.விமலநாதன்

0
53

அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக எதிர்காலத்தில் நோயற்ற வாழ்வுடைய சமூகமொன்றை உருவாக்கும் பொருட்டு விவசாயத்தில் சேதன உரத்தைப் பயன்படுத்தி உரிய விளைச்சலைப் பெற்றுக்கொள்ள அனைவரும் முன்வரவேண்டும் என மாவட்ட அரச அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு நீர்பாசனத்திணைக்களத்தின் கீழுள்ள வவுனிக்குளத்தின் கீழான சிறுபோக பயிர்செய்கை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு நீர்பாசனத்திணைக்களத்தின் கீழுள்ள வவுனிக்குளத்தின் கீழான சிறுபோக நெற்செய்கைக்கான பங்கீட்டு கூட்டமானது வவுனிக்குளம் நீர்ப்பாசன பொறியலாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வவுனிக்குளம் நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது இங்கு கருத்துத் தெரிவித்த மாவட்டச் அரசாங்க அதிபர்,

” தற்போது அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக எதிர்காலத்தில் நோயற்ற வாழ்வுடைய சமூகமொன்றை உருவாக்கும் பொருட்டு விவசாயத்தில் சேதன உரத்தைப் பயன்படுத்தி உரிய விளைச்சலைப் பெற்றுக் கொள்ள அனைவரும் முன்வரவேண்டும்” எனத் தெரிவித்தார்.

இந்த வருடம் வவுனிக்குளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கைக்காக 2142 ஏக்கர் இடதுகரையில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் விநாயகர்புரம் 700 ஏக்கர், பொன்னகர் 44 ஏக்கர், பூவரசங்குளம் 650 ஏக்கர், கரும்புள்ளியான் 270 ஏக்கர், பாண்டியன்குளம் 478 ஏக்கர் செய்கை பண்ணப்படவுள்ளது.

மேலும் வயற் செய்கைக்கான நீர் பங்கு விநியோகம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இதனைவிட முக்கிய தீர்மானமாக இனி வருங் காலங்களில் கண்டமுறையிலும் வாய்க்கால்கள் அடிப்படையிலும் சிறுபோகம் மேற்கொள்ளப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர்கள், மாவட்ட பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர், மாவட்ட விவசாயப் பணிப்பாளர், பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர், கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர், கமநல காப்புறுதி சபையின் உதவிப்பணிப்பாளர், மாவட்ட நீர்வாழ் உயிரின வள விரிவாக்கல் உத்தியோகத்தர், மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களம், மாவட்ட வனத்துறை உத்தியோகத்தர், விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.