கோட்டாபயவின் கோரிக்கை முற்றாக நிராகரிப்பு : 20 ஆவது திருத்தச் சட்டத்திற்க்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

0
67

மீண்டும் அமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு அரசதலைவர் விடுத்த கோரிக்கையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிராகரித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், முன்னாள் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கு கட்சி எடுத்த தீர்மானத்தை மாற்ற முடியாது எனவும் மக்களின் கோரிக்கையை நிராகரிக்க முடியாது எனவும் தமது கட்சியின் நாடாளுமன்ற குழு அரச தலைவரிடம் தெரிவித்துள்ளதாக நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காணும் திட்டத்தை முன்வைக்குமாறும் அரச தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (6) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தம் செய்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறைமையை நீக்குவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கைக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கும் இடையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே தாம் இந்தக் கருத்துக்களை வெளியிட்டதாக நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர், முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர, தேசிய அமைப்பாளர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, பொருளாளர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஷான் விஜயலால் டி சில்வா, ஜகத் புஷ்பகுமார, சாமர சம்பத் தசாந்த, அங்கஜன் இராமநாதன். மற்றும் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.