நாடாளுமன்றில் தன் பெரும்பான்மையை தக்கவைக்க போராடும் அரசு!

0
60

நாடாளுமன்றில் தனது பெரும்பான்மையை தக்கவைத்துக்கொள்ள அரசாங்கம் கடுமையாக போராடி வருகிறது.

இதன்படி, நாடாளுமன்றில் தமது பெரும்பான்மையை தக்கவைக்கொள்ள அரச தலைவர், பிரதமர் மற்றும் பஷில் ராஜபக்ச ஆகியோர் அரசியல் கட்சி பிரமுகர்களுடன் தொடர்ச்சியான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

நேற்றைய நாடாளுமன்ற ஒத்திவைப்பிற்கு பின்னர் நடாத்தப்பட்ட விசேட கட்சி தலைவர் கூட்டம் மற்றும் அரசில் இருந்து விலகியதாக அறிவித்த சுகந்திர கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரச தலைவரிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்புக்கள் இதனை தெளிவுபடுத்துகின்றன.

அந்தவகையில் சுயாதீனமாக இயங்குவார்கள் என நேற்று அறிவித்த 43 பேரில், அருந்திக்க பெர்ணாண்டோ , ரொஷான் ரணசிங்க , கயான் ஆகிய மூவர் தாம் இன்னும் அவ்வாறானதொரு முடிவை எடுக்கவில்லை என அறிவித்துள்ளனர்.

அரசிலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த முஷாரப் சுயாதீனமாக இயங்கப்போவதாக நேற்று சபையில் அறிவித்தார்.

ஆனால் இசாக் ரஹ்மான், அலி சப்ரி ஆகியோர் தமது முடிவுகளை அறிவிக்கவில்லை.

அதேபோன்று முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வரும், தற்போது மௌனம் காத்துவருகின்றனர்.

எதிரணியில் இருந்து 20 ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவளித்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட அரவிந்தகுமார், டயானா ஆகியோரும் தமது முடிவை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. எனவே, இவர்களின் ஆதரவும் தமக்குதான் என அரசாங்கம் கருதுகின்றது.