ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு நெருக்கடி! மாபெரும் போராட்டத்திற்கு தயாராகும் பொதுப்பணித்துறை

0
86

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் இராஜினாமாவை பிரதான கோரிக்கையாக முன்வைத்து அனைத்து அரச ஊழியர்களும் பங்கேற்கும் பாரிய வேலைநிறுத்தம் ஒன்றை முன்னெடுப்பது குறித்து அரச துறையில் உள்ள தொழிற்சங்கங்கள் தற்போது கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

பதவி விலகளுக்கு மேலதிகமாக, வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் (CoL)மற்றும் நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டத்தை திரும்பப் பெறுதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மேற்படி வேலைநிறுத்தம் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக முன்னணி பொதுச் சேவை தொழிற்சங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

“தற்போதைய நெருக்கடிக்கு அரசியல் அதிகாரிகள் தீர்வுகாணத் தவறியதற்கு எதிராக, பல கட்டங்களாகப் போராட்டம் நடத்த அரசு ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி, மூன்றாம் கட்டமாக நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தத்தை முன்னெடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதேவேளை, நெருக்கடி நிலைமைக்கு அரசாங்கம் விரைவான தீர்வை வழங்குமாறு கோரி அனைத்து அரச ஊழியர்களும் இன்று (6) பிற்பகல் உணவு இடைவேளையின் போது மௌனப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக இலங்கை அரச உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க சங்கம் (SLGOTUA) அறிவித்துள்ளது.

மேலும், நாடளாவிய ரீதியில் 247,000 ஆசிரியர்களும் 16,000 அதிபர்களும் இணைந்து நேற்றைய தினம் அனைத்து வலயக் கல்வி அலுவலகங்களுக்கு முன்பாக போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு ஆகியவற்றைக் கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அண்மைக்காலமாக இந்தப் பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பதவி விலகக் கோரி நாடளாவிய ரீதியில் தற்போது போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை, 600,000 அரச உத்தியோகத்தர்களை உறுப்பினர்களாகக் கொண்ட SLGOTUA, அரச நிறுவனங்களில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வை வழங்காவிடின் எதிர்காலத்தில் கடமைகளில் இருந்து விலக நேரிடும் என அண்மையில் எச்சரித்துள்ளது.