இலங்கையில் நகரும் திக்திக் நிமிடங்கள்: என்ன தான் நடக்கப்போகிறது…!!

0
91

இலங்கையில் பொருளாதார நிலைமை மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. கடனை நம்பியே நாடு இயங்குவது போலான சூழலொன்று தற்போது ஏற்பட்டுள்ளது.

நாட்டில் மக்கள் ஒவ்வொரு நாளும் காலை விடிந்தது முதல் இரவிரவாக நீண்ட வரிசைகளில் நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அத்தியாவசிய பொருட்கள் முதல் எரிபொருட்கள் வரை என அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் பெரும்பாடு படவேண்டிய நிலைமையே காணப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது மக்களுக்கு தேவையானதை பார்த்து வழங்க வேண்டிய துறைசார் அமைச்சர்களும் இல்லை (கட்டுரை 2022.04.04 காலை எழுதப்பட்டது). அமைச்சர்கள் இருந்த போதே பெரும் கஷ்டத்தில் இருந்த மக்கள் இப்போது அமைச்சர்களும் இல்லாமல் என்ன செய்யப்போகிறார்கள் என்பது கேள்விக்குறியே.

நாட்டில் அண்மைக்காலமாக அரசியலில் திடீர் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதிலும் நேற்று முதல் நாடு ஒரு பரபரப்பான சூழலிலேயே இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒட்டு மொத்தமாக பதவி விலகிய அமைச்சர்கள், பதவி விலகவே மாட்டேன் என அடம்பிடிக்கும் பிரதமர், அவசர அவசரமாக கூட்டங்களை கூட்டும் ஜனாதிபதி, நாடு பற்றியெரியும் சூழல் வந்தாலும் வாயே திறக்காத நிதியமைச்சராக இருந்த பசில்.

இன்றைய தினம் அதிலும் ஒவ்வொரு நிமிடமும் திக்திக் நிமிடங்களாகவே நகர்ந்து வருகின்றன. நாட்டில் என்ன தான் நடக்கப்போகிறது? அடுத்த திட்டம் தான் என்ன?? இவ்வாறான கேள்விகள் அனைவர் மனதையும் அரித்துக் கொண்டு தான் இருக்கின்றன.

வாக்கு வழங்கி இந்த அரசாங்கத்தை கொண்டு வந்த மக்களே தயவு செய்து வேறு யாராவது ஒருவரிடம் நாட்டை வழங்கி விட்டு சென்று விடுங்கள் என்று மன்றாடியும், பல இடங்களில் பெருமெடுப்பிலான போராட்டங்களை நடத்தி ஆக்கிரோசமாகவும் வலியுறுத்தி வருகிறார்கள்.

மக்களின் ஆணையே முக்கியம் என கூறிக்கொண்டு இந்த அரசாங்கம் மக்களின் தற்போதைய கருத்தையும் ஏற்றுக் கொள்ளப் போகிறதா? இல்லையெனில் சூழ்நிலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்போகிறதா?

இல்லையென்றால் என்னதான் செய்யப் போகிறது? இதெல்லாம் ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் தற்போதுள்ள பாதிப்பு எத்தனை வருடங்களுக்கு நம் மீது சுமைகளை ஏற்றி வைக்கப் போகிறது என்பது மிகப்பெரும் அச்சத்தை எழச் செய்கிறது.

அதனால் தான் என்னவோ “நாட்டை நாசம் செய்தது போதும், இதுவரையிலான பாதிப்பை சரிப்படுத்தவே ஆண்டுகள் பல செல்லும், இத்துடன் நாசகார அரசியலை முடிவிற்கு கொண்டு வந்தது நாட்டை வேறொருவரிடம் ஒப்படைத்துவிட்டு செல்லுங்கள்” என்ற குரல்கள் விண்ணைமுட்டும் அளவிற்கு நாட்டின் பல பகுதிகளில் ஒலித்து வருகின்றது போல்.

இறுதியில் இலங்கை வாழ்வதற்கே தகுதியற்ற நாடாகிவிடுமோ என்ற அச்சம் இளைஞர்களை வெகுண்டெழச் செய்துள்ளது என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.