இன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட 21 வயது இளம்பெண்!

0
96

தமிழகத்தில் இன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் இளம்பெண் உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தனபால் – இந்திரா தம்பதிக்கு தேவா (25) என்ற மகனும், தேவதர்ஷினி (21) என்ற மகளும் இருந்தனர். பட்டதாரியான தேவதர்ஷினிக்கும் நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

இவர்களுக்கு இன்று திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை மணப்பெண் வீட்டில் பரிசம் போடுவதற்கான நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. இதற்கான பணிகளில் மணப்பெண் தேவதர்ஷினியின் வீட்டார் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் தேவதர்ஷினியின் தாய் இந்திரா அரிசி எடுப்பதற்காக வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்றார். அப்போது தேவதர்ஷினி அங்கு தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்ததை பார்த்து கத்தி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் தேவதர்ஷினியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது தேவதர்ஷினி ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.  இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் தேவதர்ஷினி உடலை கைப்பற்றிவிட்டு அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.