வவுனியாவில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

0
74

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நாட்டை விட்டு வெளியேறுமாறு கோரி வவுனியா பல்கலைக்கழக மாணவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று (05.04) காலை வவுனியா, மன்னார் வீதியில் அமைந்துள்ள காமினி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பித்த ஆர்ப்பாட்ட பேரணியானது கண்டி வீதியை அடைந்து, ஹொரவப்பொத்தானை வீதியூடாக பசார் வீதி சென்று பழைய பேருந்து நிலையத்தை அடைந்தது.

இதன்போது மணிக்கூட்டுக் கோபுர சந்தி மற்றும் பழைய பேருந்து நிலையம் என்பவற்றுக்கு முன்னால் வீதியை மறித்தும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறு, கோட்டாபய ராஜபக்ச வீட்டுக்குச் செல்லுங்கள்- நாட்டை சீரழிக்காதே, பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுக்காதே, அணுகுண்டு இல்லாமல் நாட்டை அழிக்காதே, கோட்டாபய ராஜபக்ச வீட்டுக்கும்- நாட்டுக்கும் கேடு, சத்தம் போடாமல் அமெரிக்காவுக்கு ஓடு’ என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர்.

இதன்போது பொலிஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.

600 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் அமைதியான முறையில் சுமார் 3 மணித்தியாலம் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து இருந்ததுடன், பின்னர் அமைதியாகக் கலைந்து சென்றனர்.