தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு! நாடளாவிய ரீதியில் டீசலுக்காக மக்கள் வரிசையில்

0
67

நாடளாவிய ரீதியில் டீசலுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதனால் மக்கள் தங்களது அன்றாட பணிகளை தொடர்நதும் முன்னெடுக்க முடியாத நிலையில் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

கிளிநொச்சி

கிளிநொச்சி நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பல்வேறு பகுதியிலிருந்தும் மக்கள் வருகை தந்து மண்ணெண்ணை பெற்று செல்கின்றனர் என முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

வாகனங்களிற்கு மண்ணெண்ணை வழங்கப்படுவது தொடர்பில் செய்திகள் வெளியாகியிருந்தமை தொடர்பில் உண்மை நிலையை மக்கள் இவ்வாறு விளக்குகின்றனர்.

நாங்கள் குறுகிய நேரத்தில் மண்ணெண்ணையை பெற்றுக் கொள்ள முடிகின்றது. 500 ரூபாவிற்கு மண்ணெண்ணை கிடைக்கின்றது. தோட்டம் செய்ய போதாது.

ஆனால் மீண்டும் வந்து பெற்றுக்கொள்ள முடியும் என்கின்றனர். ஆனால் வந்து குறுகிய நேரத்திற்குள் பெற்றுக்கொள்ள முடியும். மண்ணெண்ணை தேவை அதிகரித்துள்ளது. தோட்டத்திற்கும், விளக்கு மற்றும் சமயல் தேவைக்கும் தேவைப்படுகின்றது.

ஆனால் வரும் எரிபொருள் போதாது உள்ளது. இருப்பதை பகிர்ந்து கொடுக்கின்றனர். மேலதிகமாக தேவைப்படும் எரிபொருளை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்கின்றனர்.

கிளிநொச்சி தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் கூறுகையில், டீசல் பெற்றுக்கொள்ள வந்தோம் ஆனால் கிடைக்கவில்லை. அதனால் காத்திருக்கின்றோம்.

கிளிநொச்சி மாவட்டத்தில் நகர் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அதிகளவான எரிபொருள் மக்களிற்கு வழங்கப்பட்டு வருகின்றது.

எமது பேருந்துகளிற்கும் தேவைகள் உள்ளது. கணிசமான எரிபொருளை பெறக்கூடியதாக உள்ளது. மக்களிற்கு முழுமையான சேவையை வழங்க எரிபொருளை போதுமான அளவில் பெற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும் வாகனங்களிற்கு மண்ணெண்ணை வழங்குவதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது. அவ்வாறான சம்பவத்தை காணவில்லை எனவும் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியா

வவுனியா வடக்கு நெடுங்கேணிப்பகுதியில் அமைந்துள்ள ஒரே ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணையைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் நீண்டவரிசையில் காத்திருந்து பெற்றுக்கொண்டபோதும் அங்கு பொருத்தப்பட்டுள்ள இயந்திரத்தில் மண்ணெண்ணையின் விலை தெளிவாக காட்சிப்படுத்தப்படவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கடமையிலுள்ள ஊழியர் கேட்கும் பணத்தை கொடுத்துவிட்டு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விவசாய மக்களை கொண்ட குறித்த பகுதியில் இது பெரும் அவல நிலையாகவும் மக்களின் பணம் சுரண்டப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

எனவே இது குறித்து உரிய அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தலவாக்கலை

தலவாக்கலை நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தை சூழ மக்கள் இன்று (05) நீண்ட வரிசையில் காத்திருந்ததுடன், வாகனங்களும் அணிவகுத்து நின்றமையினால் குறித்த நகர் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் டீசலுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள இந்த நிலையில், தலவாக்கலை நகரிலுள்ள எரிபொருள் நிலையத்திலும் டீசல் இருக்கவில்லை எனவும் சுமார் 3 நாட்களுக்கு பிறகு இன்றைய தினமே டீசல் விநியோகிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

டீசல் இன்மையால் பலரின் வாகனங்கள் வீடுகளிலும், வீதிகளிலும் அப்படியே நிற்பதாகவும், சுமார் 20 லீட்டர் கேன்களுடன் சாரதிகள், நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.

அத்துடன் பாதுகாப்பு கடமையில் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

     

யாழ்ப்பாணம்

வடமராட்சி மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து கடற்தொழிலாளர்கள், விவசாயிகள், மற்றும் சமையலுக்காக மண்ணெண்ணெய் நிரப்புவதை இன்றும் அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வடமராட்சியில் மண்ணெண்ணெய் எங்கும் இல்லாத நிலையில் இன்றைய தினமும் மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் எரிபொருள் பெற்றுள்ளனர்.