உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் புலப்பெயர் இலங்கையர்களால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது

0
62

இலங்கை அரசாங்கம் மற்றும் தற்போதைய இலங்கையின் நெருக்கடி நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து உலகின் பல்வேறு பகுதிகளில் புலப்பெயர் இலங்கையர்களால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவின் மகனின் வீட்டிற்கு வெளியே ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

கோட்டாபய ராஜபக்சவை வீட்டிற்கு அழைக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கைவாழ் மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் தொடர்பில் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களும் தமது கவலையையும் எதிர்ப்பையும் வெளியிடுகின்றனர்.

வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்காக வீதிக்கு இறங்கியுள்ள மக்களுக்கு ஆதரவு வழங்குவதற்காக வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களும் ஒன்றிணைந்துள்ளனர்.

கனடாவிலுள்ள இலங்கையர்களால் தலைநகர் ஒட்டாவாவில் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கனடா நாடாளுமன்ற கட்டட தொகுதிக்கு முன்பாக இந்தப் போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.

இதனிடையே, அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலும் இலங்கையர்களால் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.