மக்கள் எழுச்சியால் இந்த ஜனநாயக விரோத அரசு விரட்டியடிக்கப்படும்! – எம். உதயகுமார்

0
432

மக்கள் எழுச்சியால் இந்த ஜனநாயக விரோத அரசு விரட்டியடிக்கப்படும். அதற்கு மலையக மக்களும் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம். உதயகுமார் (M. Udayakumar) தெரிவித்துள்ளார்.

தலவாக்கலையில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“இந்த அரசின் வீழ்ச்சிப்பயணம் ஆரம்பித்துவிட்டது, ராஜபக்ச குடும்பம் நாட்டைவிட்டு ஓடத் தயாராகிவிட்டது. அரச தலைவர் தேர்தலின்போது கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் பெரிதாக பேசப்பட்டது. மீட்பாரென வர்ணிப்புகள் இடம்பெற்றன.

ஆனால் இன்று அவர் புஷ்வாணமாகியுள்ளார். தம்மால் நாட்டை ஆள முடியாது என்பதை அரச தலைவர் உள்ளிட்ட இந்த ஆட்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். நாடு இன்று பாதாளத்துக்குள் விழுந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலைமையை ஏற்படுத்திய அரசை விரட்டியடிப்பதற்கான போராட்டத்தை நாம் 15 ஆம் திகதி கொழும்பில் நடத்தினோம். அந்த எழுச்சியின் பின்னரே தன்னெழுச்சி போராட்டங்கள் உருவாகியுள்ளன.

ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து போராட்டங்களை ஒடுக்க முடியாது. நாளை நடக்காவிட்டாலும் பிரிதொரு நாளில் நிச்சயம் அது நடக்கும். மக்களின் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முற்படக்கூடாது.

மக்கள் எழுச்சியால் இந்த அரசு விரட்டியடிக்கப்படும். சஜித் பிரேமதாச தலைமையில் மக்கள் ஆட்சி மலரும். அதில் தமிழ் முற்போக்கு கூட்டணியும் பிரதான பங்காளியாக அங்கம் வகிக்கும். இந்த அரசுக்கு சாவு மணி அடிப்பதற்கான நடவடிக்கையை தலவாக்கலை மண்ணில் விரைவில் ஆரம்பிப்போம்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.