சுகாதார அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சரின் அரச தலைவருடனான பேச்சு வார்த்தை என்ன? மக்களுக்கான அடுத்த அடி!

0
101

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் மருந்துப் பொருட்கள் வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தும் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண, அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் 31.03.2022 அன்று பிற்பகல் நடத்திய பேச்சுவார்த்தையில் மருந்துப்பொருட்கள்,மருத்துவமனைகளுக்கான அறுவை சிகிச்சை உபகரணங்கள் கொள்வனவுக்கான டொலர்கள் பெற்றுக்கொள்ளும் முயற்சி முற்றாக தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பில் இரண்டு அமைச்சர்களும் மிகவும் உணர்ச்சிகரமான கருத்துக்களை வெளியிட்டதாகவும், நிலைமையை நாட்டுக்கு தெரிவிப்பதைத் தவிர வேறு வழியில்லை என தெரிவித்துள்ளதாக சுகாதாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் சன்ன ஜயசுமண இருவரும் மருந்துகள், சத்திரசிகிச்சை உபகரணங்கள், ஆய்வக பொருட்கள், மின்சாரம், எரிபொருள், உணவு, துணை மருத்துவ சேவைகள் மற்றும் இறக்குமதி செய்யப்படும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான கடன் கடிதங்களுக்கு உடனடியாக டொலர் வழங்கப்படாவிட்டால் வைத்தியசாலை அமைப்பே வீழ்ச்சியடையும் என அரச தலைவரிடம் கடுமையாக வலியுறுத்தியுள்ளனர்.

ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மருத்துவமனை அமைப்பு மிகவும் சிரமத்துடன் நடத்தப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் டொலர்களைக் கேட்டு மிகவும் சோர்வாக இருப்பதாகவும் இருவரும் தெரிவித்தனர்.

கடந்த பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கான கூட்டங்களில் வாக்குறுதியளிக்கப்பட்ட தொகையில் பாதியை கூட நிதியமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கி ஆளுனர் இதுவரை செலுத்தவில்லை என அமைச்சர்கள் இருவரும் அரச தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

 அரச தலைவர் செயலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் அரச தலைவரின் செயலாளர் காமினி செனரத், சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் சஞ்சீவ முனசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் மருந்துப் பொருட்கள் வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண ஆகியோர் சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்த திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.