கூட்டமைப்பிலிருந்து டெலோ வெளியேறுவது அச்சமல்ல சந்தோசமே- சுமந்திரன் பகிரங்கம்!

0
284

டெலோ தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இருந்து வெளியேறினால் சந்தோசமாக இருக்கும் எமது கட்சியில் பலருக்கு நீண்ட கால எதிர்பார்ப்பே இவர்கள் எப்போது போவார்கள் என்பதே எனவும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 ஊடகவியலாளரொருவர் கடந்த காலங்களில் ஈ.பி.ஆர்.எல்.எப் சுட்டமைப்புக்குள் இருந்து கொண்டு தமிழரசுக்கட்சியை விமர்சித்து பின்னர் வெளியேறியது அதேபோன்றதான நிலையில் தற்போது டெலோ காணப்படுகின்றது எனவே டெலோவும் வெளியேறிவிடும் என்ற அச்சம் உங்களுக்கு உள்ளதா என கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

வவுனியாவில் தந்தை செல்வாவின் 124 ஆவது பிறந்தநாள் நிகழ்வின் பின்னர் தமிழரசுக்கட்சியின் தாயகம் அலுவலகத்தில் இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

ஏன் அவர்கள் வெளியேறிவிடுவர்கள் என்று அச்சமாக இருக்க வேண்டும். அது சந்தோசமாகவும் இருக்கலாம் தானே. எமது கட்சியில் பலருக்கு நீண்ட காலமான எதிர்பார்ப்பு இவர்கள் எப்போது போவார்கள் என்பது.

எனினும் நாங்கள் தமிழ் மக்களை பிரதிநிதிப்படுத்தும் கட்சிகளில் பிளவு இருக்க கூடாது. ஏல்லோரும் சேர்ந்து இயங்குவது எமது மக்களுக்கு பலமான விடயம் என்பதனால் நாங்கள் எல்லோருடனும் சேர்ந்து பயணிக்கின்றோம்.

இன்று அரசாங்கத்துடன் தமிழ் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தும் சூழ்நிலையில் டெலோ மட்டுமல்ல வெளியில் உள்ள ஈ.பி.ஆர்.எல.எப், விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியாகட்டும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியாகட்டும் எல்லோரும் இதற்கு இணங்கி ஒன்றாக சேர்ந்து நாங்கள் எங்களுடைய நிலைப்பாட்டை அரசாங்கத்துக்கு முன் வைக்க வேண்டும் என்பதே எனது தாழ்மையான கோரிக்கை.

தமிழரசு கட்சியின் பேச்சாளர் என்ற வகையிலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் என்றவகையிலும் இந்த அழைப்பை விடுக்கின்றேன். நாங்கள் ஆயுதப்போராட்டத்தினை கொச்சைப்படுத்தவும் இல்லை. காட்டிக்கொடுக்கவும் இல்லை.

ஆயுதப்போராட்டத்தினை நேரடியாகவே காட்டிக்கொடுத்தவர்கள் பலர் நேரடியாகவே கொலை செய்து இன்று தாங்கள் தான் விடுதலைப்புலிகளின் பிரதான ஆதரவாளர்கள்போல் காட்டிக்கொண்டு திரிகின்றனர்.

அதில் மக்களுக்கு தெளிவு இருக்க வேண்டும். எனக்கு வன்முறையில் நம்பிக்கை இல்லை என்பது ஆயுதப்போராட்டத்திற்கு எதிரான கூற்று அல்ல. எனக்கு நம்பிக்கை இல்லை என்பதே தான்.

ஆனால் அந்த ஆயுதப் போராட்டம் நடந்த காலத்திலேயே அதனை முன்னின்று நடத்தியவர்களை காட்டிக்கொடுத்து ஆயுதத்தை சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக திருப்பாமல் தங்களுடைய சொந்த போராளிகளுக்கு எதிராக சகோதர இயக்கங்களுக்கு எதிராக திருப்பியவர்கள் இன்று தாம் விடுதலைப்புலிகளுக்கு சார்பாக இயங்கியவர்களை போல பொய்யாக வேடம் போட்டுத் திரிகின்றனர்.

இதில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். அண்மையில் எங்களோடு பேச்சுக்கு வரமாட்டோம் என பகிஸ்கரித்த இயக்கத்தின் தலைவர் சொல்லியிருந்தார் சிறிசபாரத்தினமும் பிரபாகரனும் இந்த சந்தர்ப்பத்தில் என்ன செய்திருப்பார்களோ அதனையே தாம் செய்தோம் என்று.

பிரபாகரனும் சிறிசபாரத்தினமும் ஒன்றாக பயணித்தவர்கள் போல கூறியிருந்தார். ஆனால் தந்தை செல்வா இந்த சந்தர்ப்பத்தில் என்ன செய்திருப்பாரோ அதனையே நாம் செய்தோம் என சுமந்திரன் தெரிவித்தார்.