ஏப்ரல் மாதத்தில் எரிபொருள் வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை!

0
310

ஏப்ரல் மாதத்தில் டீசல், பெற்றோல் மற்றும் ஜெட் எரிபொருள் உள்ளிட்ட எரிபொருட்களை எந்தப் பிரச்சினையும் இன்றி வழங்க முடியும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ஊடக மையத்தில்  இன்று இடம்பெற்ற ஊடக  சந்திப்பிலே இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் சுமித் விஜேசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியக் கடன் வசதியின் கீழ் அட்டவணையின் படி எரிபொருள் ஏற்றுமதிகள் பெறப்படும் என்பதால், ஏப்ரல் மாதத்தில் டீசல், பெற்றோல் மற்றும் ஜெட் எரிபொருள் உள்ளிட்ட எரிபொருட்களை எந்தப் பிரச்சினையும் இன்றி வழங்க முடியும். 

கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் எரிபொருள் பாவனை வழக்கத்திற்கு மாறாக 35% அதிகரித்துள்ளது.

இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் எரிபொருள் இறக்குமதிக்காக ஏறக்குறைய 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாகவும், தற்போதைய விகிதத்தில் விலை நிலையாக இருந்தால், ஆண்டு முழுவதும் எரிபொருளை இறக்குமதி செய்ய 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது 15 ஆண்டுகளுக்குப் பிறகு குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும். கடந்த ஆண்டு எரிபொருள் இறக்குமதிக்காக 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே செலவிடப்பட்டது.

இந்த ஆண்டு மட்டும் மூன்று மாதங்களுக்குள் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவழிக்க வேண்டியிருந்தது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.