வவுனியா பாடசாலைக்கு அருகில் அகற்றப்படாத குப்பைகள்! துர்நாற்றம் வீசுவதாக மக்கள் விமர்சனம்

0
62

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம், கற்குழி ஆகிய பகுதிகளில் நீண்ட நாட்களாக வீட்டுக் குப்பைகள் அகற்றப்படவில்லையெனவும், இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக பிரதேச மக்கள் விமர்சனம்தெரிவித்துள்ளனர்.

பாடசாலைக்கு மாணவர்களை அழைத்து செல்லும்போது துர்நாற்றம் வீசுகின்றது. இதனை நீண்ட நாட்களாக அகற்றுவதற்கு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

குப்பைகளை தரம் பிரித்து பைகளில் கட்டிவைக்குமாறு நகரசபை ஊழியர்களினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்ட நிலையிலும் அதனை அப்பகுதி மக்கள் பின்பற்றவில்லை.

இந்நிலையில், தரம் பிரித்து வழங்கும் குப்பைகளை எடுக்குமாறு நகரசபை அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக நகரசபை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

கற்குழி நகரசபை உறுப்பினரிடம் இது தொடர்பாக வினவியபோது, சபைக்கு இது குறித்து முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அகற்றுவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

நகரசபை ஊழியர்கள் பற்றாக்குறை, கண்காணிப்பாளரின் மேற்பார்வையில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளினால் நகரில் இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.