மேற்கத்திய நாடுகள் குறுக்கே வந்தால் மூன்றாம் உலகப்போர் நிச்சயம்.! ரஷ்யா விடுத்த மிரட்டல்!

0
59

உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் களமிறங்கினால் மூன்றாவது உலகப் போரை தடுக்க முடியாத நிலைமை ஏற்படும் என ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

36 மணி நேரத்தில் உக்ரைன் தலைநகரை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக கூறி கடந்தமாதம் 24 ஆம் திகதி உக்ரைன் மீது போரை ஆரம்பித்த ரஷ்யா, தற்போது ஒருமாத காலமாக போரிட்டு வருகிறது.

ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைன் நகரங்களை கொஞ்சம் கொஞ்சமாக மொத்தமாக சிதைத்து வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட துருப்புக்களை அனுப்பும் திட்டமிருந்தால் அது கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என ரஷ்யா நேட்டோ நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்யாவின் திட்டங்கள் அனைத்தும் உக்ரைன் துருப்புகளால் முறியடிக்கப்பட்டுவரும் நிலையிலேயே இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளது. அதேசமயம் உக்ரைனில் ரஷ்யாவின் இழப்புகளை மூடி மறைத்துவரும் விளாடிமிர் புடின் நிர்வாகம், உயிரிழப்புகளையும் உத்தியோகப்பூர்வமாக வெளியிட மறுத்து வருகிறது.

உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ நாடுகள் களமிறங்கக் கூடும் என்ற அச்சத்தில், தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறது ரஷ்யா. அதேசமயம் ரஷ்யாவின் மிரட்டலை ஒப்புக்கொள்ளும் வகையில் நேட்டோ நாடுகளும், ரஷ்யாவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை தாமதப்படுத்தி வருகிறது.

இதனிடையே, உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட நேட்டோ ஆணையை போலந்து நாடும் என்ற கவலை ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, அப்படியான சூழல் ஏற்பட்டால் உக்ரைனில் நேட்டோ மற்றும் உக்ரைன் படைகளுக்கும் எதிராக ரஷ்யா போர் தொடுக்கும் நிலை ஏற்படும் என்ற அச்ச நிலையும் உருவாகியுள்ளது.

அப்படி உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் களமிறங்கினால் அது கண்டிப்பாக மூன்றாவது உலக போருக்கான ஆயத்தமாகவே இருக்கும் என ரஷ்யா மிரட்டல் விடுத்துள்ளது.