மக்களை திசை திருப்பும் வகையில் ரணிலால் உருவாக்கப்பட்ட போலிச் செய்தி- ஐக்கிய மக்கள் சக்தி பாரிய குற்றச்சாட்டு!

0
68

நாட்டு மக்களை திசை திருப்பும் வகையில் பிரதமர் பதவிக்கு ரணில் நியமிக்கப்பட உள்ளதாக சமூக ஊடகங்களில் போலிச் செய்திகள் வெளியிடப்படுவதாகவும், அவ்வாறான செய்திகளை உருவாக்குவதில் ரணில் வல்லவர் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ஐக்கிய மக்கள் மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தற்போதைய அரசாங்கம் ரணிலை பிரதமராக நியமிக்க உள்ளதாக வெளியான செய்திகள் முற்று முழுதான பொய்ச் செய்தி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.எம். மரிக்கார்

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவி வழங்கப்பட உள்ளதாக வெளியான செய்தி அவராலேயே உருவாக்கப்பட்ட செய்தி எனவும் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமன்றி ஒரு நாடாளுமன்ற ஆசனம் கொண்ட கட்சிக்கு பிரதமர் பதவியை வழங்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை இடதுசாரி கொள்கைகளை உடைய விமல், வாசு, உதய கம்மன்பில போன்றவர்களுடன் ரணிலுக்கு இணைந்து செயற்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரணிலின் அரசியல் மற்றும் பொருளாதார அறிவினைக் கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.