தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு நிதியுதவி! 6 பேர் மீது இந்தியாவில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல்!

0
65

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி வழங்கிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 பேர் மீது இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது.

இந்தியா மற்றும் இலங்கையில் நடவடிக்கைகளை மீண்டும் ஒருங்கிணைத்து புதுப்பிக்கும் முயற்சியில், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, செயலற்ற வங்கிக் கணக்குகளில் வைக்கப்பட்டிருந்த பணத்தை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் வகையில்; திருப்பியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்களான லெட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா, டி. கெனிஸ்டன் பெர்னாண்டோ மற்றும் கே.பாஸ்கரன் ஆகியோர் வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்திய அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி செயல்படாத வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தைப் பெறுவதற்கு சதி செய்துள்ளனர்.

இந்தநிலையில் இந்திய அடையாள ஆவணங்களை போலியாக தயாரிப்பதில்; ஜோன்சன் சாமுவேல், தர்மேந்திரன் மற்றும் மோகன் ஆகியோர் உடந்தையாக இருந்தனர் என்று இந்திய தேசிய புலனாய்வு சேவை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இந்த வழக்கின் பிரதிவாதிகளில் ஒருவரான 50 வயதான மேரி பிரான்சிஸ்கா, போலி கடவுச்சீட்டை வைத்திருந்ததற்காக குற்றம் சுமத்தப்பட்டு 2021ஆம் ஆண்டு சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு சென்னையின் ‘கியூ” பிரிவால் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தநிலையிலேயே மேலும் பல கடவுச்சீட்டுக்களும் போலியான ஆவணங்களும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்ட்டமை தெரியவந்ததாக தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.