கோட்டாபய – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நெருக்கம்! இரகசிய காய்நகர்த்தலில் அமெரிக்கா – இந்தியா தரப்பு

0
101

பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராகவும் நிதியமைச்சராகவும் பதவியேற்பதற்கு முன்னர் கடந்த வருடம் யூன் மாதம் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தபோது, ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலையை இலங்கை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்காக உருவாக்கிய வலைப்பின்னல் தற்போது பட்டவர்த்தனமாகியுள்ளது. இச் சூழலில் தமிழர் தரப்புக்குள், இந்தியாவையும் மேற்கையும் நோக்கி இணைந்த கோரிக்கைகள் முன்வைக்கப்படவேண்டும்.

சுமந்திரன் – செல்வம் பிளவு மட்டுமல்ல, ஜெனிவாவை நோக்கி முன்வைக்கப்பட்ட இன அழிப்புக் குறித்த சர்வதேச விசாரணை பற்றிய கோரிக்கை இந்தியாவிடம் முன்வைக்கப்படவில்லை. அதைப் போல, ஒற்றையாட்சி நிராகரிப்பு இன்றி, 13 ஆம் திருத்தம் என்ற பெயரில் அங்கீகரிக்கப்பட்டுள்ள தவறு நடந்துள்ளது. இந்தத் தவறுகள் உடனடியாகத் திருத்தப்படவேண்டும்.

அமெரிக்காவில் இருந்து இணையவழி மூலம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் புலம்பெயர் அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சிலரோடு நடத்திய உரையாடல்களும் அதன் பின்னர் கொழும்பில் ஓகஸ்ட் மாதம் (அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் நடந்த சந்திப்புக்களின் நீட்சியாகவே) அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நேற்றுத் திங்கட்கிழமை சந்தித்தும் உரையாடியிருக்கின்றது.

பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கல்வி அமைச்சராக இருந்தபோதே கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் தூதுவரின் முன்னிலையிலேயே சுமந்திரன் உள்ளிட்ட தரப்புடன் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. அடுத்த சில நாட்களில் பேராசிரியர் பீரிஸ் வெளியுறவு அமைச்சராகப் பதவியேற்றதுடன் அமெரிக்காவில் இருந்து கொழும்பு திரும்பிய பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராகவும் நிதியமைச்சராகவும் பதவியேற்றார்.

இதன் பின்புலத்திலேயே செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான பேச்சுக்களை யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் நான்கு கட்டப் பேச்சுக்களை நடத்தியிருந்து. இந்த நகர்வுகளுக்குத் தமிழ்த்தரப்பு இரு பிரிவாகக் கையாளப்பட்டிருக்கின்றது. ஆனால் பிரித்தாளும் தந்திரங்களை அறிந்துகொள்ள முடியாது அல்லது தத்தமது சுயமரியாதைப் பிரச்சினைகளால் அமெரிக்க- இந்திய அரசுகள் வெவ்வேறாகக் கையாண்ட இந்த அணுகுமுறைக்குள் ஆறு தமிழ்த்தேசியக் கட்சிகளும் நரேந்திரமோடிக்குக் கடிதம் அனுப்பும் விவகாரத்துக்குள் சிக்குப்பட்டதாக் கூறலாம்.

இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதவேண்டியது அவசியமானதே, ஆனல் கடிதத்தின் உள்ளக்கம் எப்படி இருக்கவேண்டும் என்பதிலேயே சிக்கல் இருக்கிறது. அமெரிக்கா சொல்வதைச் சுமந்திரனும், இந்தியா சொல்வதைச் செல்வம் அடைக்கலநாதனும் செயற்படுத்தும் அளவுக்குத் தற்போதைய தமிழர் அரசியல் பிளவுகள் தென்படுகின்றன. இலங்கையின் இராஜதந்திரிகள் இதை நன்கு அறிந்து பயன்படுத்துகின்றனர்.

அதாவது, என்ன விலைகொடுத்தாயினும் இலங்கை ஒற்றை ஆட்சிக்குள் தமிழர்களை முடக்கிவிட வேண்டுமென்ற இலங்கையின் விருப்பம் நிறைவேற்றப்படுகின்றது. அத்துடன் சர்வதேசம் கூறுகின்ற போர்க்குற்ற விசாரணையையும் தமிழ்த்தரப்பு விடுக்கும் இன அழிப்புக் குறித்து விசாரணை செய்யவேண்டும் என்பதையும் முற்றாகவே நீக்கம் செய்வதற்குரிய ஏற்பாடுகளிலும் இலங்கை கனகச்சிதமாகத் தனது நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது.

இந்த இடத்திலேதான் பொருளாதார அபிவிருத்தி என்ற பெயரில் புலம்பெயர் தமிழர்களையும் மற்றும் தமிழ்நாட்டையும் ஈடுபடுத்தும் நகர்வுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் பின்னணியிலேயே சுமந்திரன் தமிழநாட்டுக்குச் சென்று நிதியமைச்சர் பழனி தியாகராஜா உள்ளிட்ட தமிழகப் பிரமுகர்கள் சிலரைச் சந்தித்திருக்கிறார் என்ற முடிவுக்கும் வரலாம்.

அதாவது கரட்டும் குச்சியும் (carrot-and-stick) என்ற தந்திரோபாயத்தை இலங்கை ஒற்றையாட்சி அரசை நோக்கி அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகும் இந்தியாவும் இணைந்தும் தனித்தனியாகவும் தீவிரப்படுத்தியிருக்கின்றன என்பதன் வெளிப்பாடே கடந்த யூன் மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நகர்வாகும். இதற்குத் தமிழரசு கட்சி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய தமிழ்த்தேசியக் கட்சிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

அதாவது இலங்கையின் விருப்பத்துக்கு ஏற்றமாதிரியும், அந்த விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற அமெரிக்க – இந்திய புவிசார் நலன் அடிப்படையிலான முனைப்புகளுக்குமே ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகளும் பகடைக்காய்களாக மாறியிருக்கின்றன. 13 ஆம் சட்டத்திருத்தம் ஓர் ஆரம்பப் புள்ளி என்ற பேச்சு எடுக்கப்படுகிறது.

13 ஆம் சட்டத்திருத்தம் சாதிக்க முடியாததை எப்படிச் சாதிப்பது என்ற கேள்வியையும் சிந்தனைகளையும் இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் முன்வைப்பதற்குப் பதிலாக, இலங்கை அரசு திட்டமிட்டே தவறாகக் கொண்டுவந்த 13 ஆம் சட்டத்திருத்தத்தை ஆரம்பப் புள்ளியாகக் கொள்வது என்ற பயனற்ற வாதத்தை வைத்து முரண்படுவதும், கையாளப்பட இடமளிப்பதும் ஆபத்தானது.

இந்தக் குற்றச்சாட்டு ரெலோவை நோக்கியே பிரதானமாக எழுகிறது. அதேவேளை, இந்திய உறவை விட அமெரிக்க உறவுக்கு முன்னிலை கொடுக்கும் சுமந்திரனுக்கும், அமெரிக்க உறைவை விட இந்திய உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரெலோவிற்கும் நடைமுறையில் அதிக வேறுபாடுகள் இல்லை. உக்ரெய்ன் போர் ஆரம்பிக்கப்பட்ட பின்னரான சூழலில் அமெரிக்கவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஆரம்பித்துள்ள பனிப்போர், இலங்கை விவகாரத்தில் அர்த்தமுள்ள தாக்கம் ஒன்றையும் பெரிய அளவில் இதுவரை ஏற்படுத்தவில்லை.

ஈழத்தமிழர்களை அணுகும் விவகாரத்தில் அமெரிக்க, இந்திய அரசுகளிடையே வேறுபாடுகள் பெரியளவில் இருப்பதாகத் தெரியவில்லை. எனினும், இலங்கையைப் பொறுத்தவரை ஈழத்தமிழர் விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளையும் ஐரோப்பிய நாடுகளையும் சமாளிப்பதில் பிரச்சினை இருக்காது. ஆனால் இந்தியாவைச் சமாளிப்பதிலேயே நெருக்கடிகளை இலங்கை எதிர்கொள்ள நேரிடும்.

இதன் காரணத்தினாலேயே 2009 இல் இறுதிப் போர் நடைபெற்றபோது இந்தியாவைக் கையாளப் பின்பற்றப்பட்ட துரொய்க்கா (troika) எனப்படும் மூவர் கொண்ட உயர்மட்டக் குழுவை இலங்கை உருவாக்கியது. அதிலே பசில் ராஜபக்ச அங்கம் வகித்திருந்தார். இதே அணுகுமுறையைக் கையாளும் சூழல் தற்போது உருவாகியுள்ளதெனலாம்.

இந்த அணுகுமுறையே 2009ஆம் ஆண்டு போரின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தது என்று அதற்குச் சாட்சியமான மகிந்தவின் முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்க தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார். இதே கருத்தை கருத்தை கோட்டபாய ராஜபக்சவும் பல சந்தர்ப்பங்களில் கூறியிருக்கிறார்.

அதாவது போர் நிறுத்தம் ஒன்றை உருவாக்கும் படியான அழுத்தம் எங்கிருந்தாவது இலங்கை மீது வருமென்றும், அது இந்தியா ஊடாக வருவதற்கே சாத்தியம் அதிகம் எனவும், அதனால் இந்தியாவைச் சமாளித்துப் போரின் முடிவைத் தமக்கேற்ற முறையில் கட்டமைக்க இலங்கை அரசுக்கு இந்த துரொய்கா அப்போது அவசியமாக இருந்தது. மூவரடங்கிய குழுவில் அப்போது பசில் ராஜபக்ச முக்கியமான ஒருவராகச் செயற்பட்டிருந்தார்.

தற்போது உக்ரெயன் போரின் பின்னரான சூழலில் துரொய்கா போன்ற செயற்பாடு ஒன்று இலங்கைக்கு அவசியமாகின்றது. அதற்கு முன்னோடியாகவே கோட்டாபய ராஜபக்ச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்திருக்கின்றார்.

கொழும்புக்கு வருகை தந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட இந்திய உயர் அதிகாரிகளையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சந்தித்திருக்கின்றது. கோட்டாபய – தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சந்திப்பை அமெரிக்க, இந்திய அரசுகள் வரவேற்றுமுள்ளன. கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியத் தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆகவே இலங்கை ஒற்றையாட்சி அரசைப் பாதுகாக்கும் முனைப்பில் ஈடுபட்டு வரும் அமெரிக்க – இந்திய அரசுகளின் ஒருங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்குள் குறித்த சில தமிழ்த் தேசியக் கட்சிகள் இலகுவாகக் கையாளப்பட்டு வரும் பின்புலத்தில் இலங்கை மேலும் ஒரு படி சென்று 2009 ஐப் போன்று இந்தியாவை எப்படிக் கையாள்வது என்ற மூலோபாயங்களை வகுத்து வருகின்றது. சுமந்திரன் – செல்வம் முரண்பாட்டை இலங்கை இராஜதந்திரிகள் தமது தேவைக்கு ஏற்பவும் பயன்படுத்துகிறார்கள் என்ற கருத்து பல தமிழ் ஊடக மற்றும் அரசியற் பரப்புகளில் முன்வைக்கப்பட்டுவருகிறது.

பொருளாதார ஈட்டத்துக்காகப் புலம்பெயர் தமிழர்களையும் தமிழ்நாட்டு மற்றும் தமிழக வர்த்தக நிறுவனங்களையும் இலங்கை அரசோடும் வடக்குக் கிழக்குத் தமிழர்களோடும் இணைந்துப் பயனிக்க வைப்பதற்காகச் சுமந்திரன் மூலமாக அமெரிக்கா கையாளும் நகர்வுகளுக்கு ஏற்ப இலங்கை முன்னெடுக்கும் ஏற்பாடுகள் தற்போது வெளிப்பட்டுள்ளன.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின்போது, தமிழர்கள் கோருகின்ற அதிகாரப் பங்கீடு (Power Sharing) பற்றியோ அல்லது அமெரிக்க- இந்திய அரசுகளின் சொற்களில் கூறப்படும் அதிகாரப் பகிர்வு (Power Devolution) பற்றியே கோட்டாபய ராஜபக்ச ஒரு வார்த்தையேனும் வெளிப்டுத்தவில்லை. ஆக சம்பந்தன் மாத்திரமே அதுவும் 13 என்றும் அதிகாரப்பரவலாக்கம் எனவும் பேசியிருக்கின்றார்.

அத்துடன் மிகப் பெரும் எண்ணிக்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக எதுவுமே பேசாமல், வெறுமேன 48 பேர் மாத்திரம் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பற்றியே கோட்டா வாய் திறந்திருக்கிறாா். அதுவும் தமிழ் அரசியல் கைதிகள் என்ற சொல்லை கோட்டாபய பயன்படுத்தவில்லை. மாறாகச் சந்தேகநபா்கள் என்றே அவர் கூறியிருக்கிறார்.

அதாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடனான பேச்சின்போது, அரசியல் சொற்களில் பிடிகொடுக்காமல், தமிழர் பிரச்சினையை இலங்கைத்தீவின் பொதுப் பிரச்சினையாகக் கருதும் தொனியே கோட்டாபய ராஜபக்சவின் பேச்சில் வெளிப்படுத்தாகச் சந்திப்பில் கலந்துகொண்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்துள்ளார்.

ஆகவே கடந்த வருடம் யூன் மாதம் அமெரிக்காவில் பசில் ராஜபக்ச முன்னெடுத்த நகர்வுகளுக்கு ஏற்பவும், தற்போது உக்ரெய்ன் போருக்குப் பின்னர் உருவாக்கியுள்ள புவிசார் அரசியல் சூழலுக்கு ஏற்ற முறையிலும் ராஜபக்ச அரசாங்கம் தமிழ்த்தரப்பை இலகுவாகக் கையாளுகின்றது என்பது இங்கு கண்கூடு. அமெரிக்காவுக்குக் ‘கணக்குக் காட்டத்’ தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை கோட்டாபய சந்தித்திருக்கிறார்.

அமெரிக்க நகர்வை முன்னெடுப்பவர் என்ற தோரணையில் சுமந்திரன் சந்திப்பில் பங்குபற்றியிருக்கிறார். கோட்டாபய ராஜபக்சவுடனான சந்திப்பில் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ பங்பற்றாது விட்டாலும், இந்திய அறிவுறுத்தல்களுக்கு அமைவாகப் பின்னர் தொடரவுள்ள காய் நகர்த்தல்களில் ஏதோவொரு முனையில் சுமந்திரன் அணியோடு இணைகின்ற நிலை ரெலோ கட்சிக்கு விரும்பியோ விரும்பாமலோ மீண்டும் உருவாகலாம்.

இங்கே, இந்திய அணுகுமுறையில் 13 பற்றியென்றாலும் ஏதேவொரு அரசியல் தீர்வு முறை சொல்லப்படுகின்றது. தமது புவிசார் அரசியல் நோக்கில் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்துக் குறைந்தபட்சமாவது 13 பற்றிப் பேசப்படுகின்றது. இருந்தாலும் இலங்கைக்கு நிதியை அள்ளிக் கொடுக்கும் அளவுக்கு ஈழத்தமிழர் விவகாரம் பற்றிய இந்திய அழுத்தங்கள் 13 உடன் மாத்திரமே நின்று விடுகின்றன.

ஈழத்தமிழர் குறித்த நிபந்தணைகள் எதனையும் இலங்கைக்கு நிதியைக் கையளிக்கும்போது இந்தியா வழங்கவேயில்லை. அமெரிக்காவோ, அரசியல் தீர்வு பற்றி எதுவுமே கூறுவதில்லை. இந்தியா அழுத்தம் கொடுக்கின்ற 13 பற்றிய விருப்பத்தை மாத்திரம் அமெரிக்காவும் வெளிப்படுத்துகின்றது. அதுவும் பகிரங்கமாகவல்ல. ஆகவே இலங்கையை இலக்காகக் கொண்டு ஈழத்தமிழர்களை மையப்படுத்திய இந்த நகர்வுகள் அனைத்துக்கும் பின்னால் அமெரிக்க – இந்திய புவிசார் அரசியல் தேவைகளும் மறைந்திருக்கின்றன என்பது வெளிப்படை.

அதற்கு இரண்டு உதாரணங்களைக் கூறலாம். ஒன்று, இந்தியா இலங்கைக்கு மேலும் வழங்கவுள்ள நிதியுதவி. ஏலவே ஒரு பில்லியன் டொலர்களுக்கான ஒப்பந்தம் பசில் ராஜபக்சவுடன் கைச்சாத்திடப்பட்டிருக்கின்றது. இரண்டாவது, இலங்கையின் எரிசக்தித் திட்டங்களுக்காக அமெரிக்க யு.எஸ்.எயிட் (USAID) எனப்படும் அமெரிக்க அபிவிருத்தி முகவா் நிலையம் ஊடாக தேவையான நிதியுதவிகளைச் செய்ய அமெரிக்கா இணங்கியுள்ளது. இது பற்றி கடந்த திங்கட்கிழமை கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் கோட்டாபய ராஜபக்சவைச் சந்தித்து உறுதியளித்துள்ளார்.

ஆகவே இலங்கை தற்போது எதிர்நோக்கியிருக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுகள் போன்ற குழப்பமான நிலைமைகளைப் பயன்படுத்தி உக்ரைன் போர்க்காலச் சூழலிலும், போரின் பின்னர் மாற்றமடையுமென எதிர்பார்க்கப்படும் புவிசார் அரசியல் பின்னணியிலும் அமெரிக்கா இலங்கையைத் தளமாக மாற்றக்கூடிய உத்திகளை இந்தியாவைக் கடந்து கையாளக்கூடிய ஏதுநிலை தோன்றியுள்ளது.

உக்ரைன் போரின் பின்னரான அமெரிக்க – இந்திய பனிப்போர்க்கால காய் நகர்த்தல்களில் கணிசமான வேறுபாடுகள் தோன்றினால், அதுவும் தென் ஆசியக் கடல் பிராந்தியம் தொடர்பாக மாற்றம் தரவல்ல அளவுக்கு அவ் வேறுபாடுகள் வெளிப்பட்டால் மாத்திரமே, இலங்கை தொடர்பான பார்வைகளில் மாற்றங்கள் ஏற்படும்.

அதாவது, ரஷ்யா ஊடாகச் சீனாவுடன் நட்புறவைப் பேணக்கூடியதொரு நிலைமை இந்தியாவுக்கு உருவாகி வரும் நிலையில், இலங்கை அமெரிக்க அணுகுமுறைக்குள் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். ஆனால், இது மேலும் பொறுத்திருந்தே அனுமானிக்கப்படக்கூடியது. இதன் பின்புலத்திலேதான் இந்தியாவை என்ன, மேற்குலகத்தை என்ன, தனித்தனியாகவோ, ஒன்றிணைந்தோ, தமிழ்த்தரப்பும் கையாளக்கூடிய காய்நகா்த்தல்களை ஒருமித்த குரலில் முன்னெடுக்க வேண்டிய காலகட்டம் தோன்றியுள்ளது.

புவிசார் அரசியல் நோக்கில் அமெரிக்கா ஒரு பக்கமாகவும் இந்தியா மற்றொரு நிலையிலும் நின்று கொண்டு கையாளப்படும் சக்திகளாக தமிழ்த் தரப்பு இருக்கவே கூடாது. மாறாகப் பசில் ராஜபக்ச கடந்த வருடம் அமெரிக்காவில் இருந்து சில புலம்பெயர் தமிழ் அமைப்புகளையும் தன் வசப்படுத்தி சுமந்திரன் செல்வம் அணிகள் ஊடாக மேற்கொண்டு வரும் வேறுபட்ட காய்நகர்த்தல்களில் இருந்து முற்றாக விலகி ஒருமித்த கருத்துடன் கோரிக்கைகளை முன்வைக்கும் தேசிய இயக்கமாகத் தமிழ்தரப்பு தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும்.