வவுனியாவில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

0
475

இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றையதினம் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இப் பணிப்புறக்கணிப்பின் காரணமாக வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபட்டிருந்ததுடன் பணிப்புறக்கணிப்பு காரணமாக பேருந்து இன்றி நீண்ட நேரம் மக்கள் காத்திருந்ததாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இப் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரவிக்கும் போது, வேதன உயர்வினை கோரி இப் பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளோம்.

2015, 2018ம் ஆண்டு காலப்பகுதிக்கு பிற்பாடு எமக்கான வேதன உயர்வு எதுவும் வழங்கப்படவில்லை. அத்தோடு தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட பொருட்களின் விலையேற்றத்தால் பெரும் கஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளோம்.

இதன் காரணமாக ஏனைய திணைக்களங்களிற்கு எவ்வாறு சம்பள உயர்வு மேற்கொள்கின்றார்களோ அதே போன்று எங்களிற்குரிய சம்பள உயர்வுகள் வழங்கப்பட வேண்டும். கட்சி மற்றும் அரசியல் செயற்பாட்டிற்கு அப்பால் இது எங்களுடைய வயிற்றுக்கான ஒரு போராட்டமாகும்.

எங்களது சம்பளத்தில் 10,000 ரூபாவினை அடிப்படை சம்பளத்தில் கூட்டியும், 7500 ரூபாவினை வாழ்க்கை படியிலும் கூட்டப்பட வேண்டும்.

அத்தோடு அதிகாரிகளிற்குரிய சம்பள உயர்வு இதுவரை சீர் செய்யப்படாது, சாரதி, காப்பாளர்களை விட மிகவும் குறைந்தளவு சம்பளம் வழங்கப்பட்டு கொண்டு இருக்கின்றது.

எனவே அதிகாரிகளிற்கான சம்பள அதிகரிப்பினை செய்வதுடன், எங்களிற்கு இடைக்கால கொடுப்பனவாக வழங்கப்படுகின்ற இடைக்கால கொடுப்பனவினை நிரந்தர கொடுப்பனவாக மாற்றி சம்பளத்தினை உயர்த்தி தருமாறு அரசிடம் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.