தமிழர்கள் விவகாரத்தில் இனவாதத்தை தூண்ட வேண்டாம்! கடும் சீற்றமடைந்த ரணில்

0
243

இனவாத கருத்துக்களை முன்வைப்பதற்கு முயன்ற சிங்கள தொலைக்காட்சியின் அறிவிப்பாளருக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடுமையான பதில்களை வழங்கியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது முன்வைக்கப்பட்ட விடயங்களை விமர்சித்து இலங்கை பிரதான சிங்கள தொலைகாட்சியின் அறிவிப்பாளர் ஒருவர் இனவாத கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க சிங்கள தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது போன்றது. இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் தீர்வுகளைப் பற்றிப் பேசுகிறது, தடை செய்யப்பட்ட அமைப்புகளின் மீதான தடையை நீக்கக் கோருகிறது, இவை சரியா? என அறிவிப்பாளர் ரணிலிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு “தடை செய்யப்பட்ட அமைப்புகள் என்றால் என்ன?” என ரணில் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த அறிவிப்பாளர், விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவி செய்ததாக கூறப்படும் அமைப்புகள் என குறிப்பிட்டுள்ளார்.

“உண்மையில், அந்த அமைப்புகளில் பல தடை செய்யப்படவில்லை. எங்கள் காலத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பிறகு இதற்கு தடை விதிக்கப்பட்டது. அந்த தடைகளை நீக்க வேண்டும் என்றே கூறப்பட்டுள்ளது.

இப்போது குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பது அவர்கள் அல்ல நீங்கள் தான். இந்த நாட்டில் ஏதாவது பிரச்சினை ஏற்படும் போது நாம் மீண்டும் இனவாதத்தினை தூண்டுகின்றோம். அது பழைய கதை” என அவர் கூறியுள்ளார்.