மேலும் மேலும் கடனாளியாகும் இலங்கை!

0
97

இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக்கொண்டே வருகிறது. டாலருக்கான பெறுமதி கூடிக்கொண்டே வருகையில், இலங்கை ரூபாயின் மதிப்பு குறைந்துகொண்டே வருவதோடு, நாட்டின் வெளிநாட்டு நிதிப் பிரிவு நெடுங்காலமாகச் சரிவைச் சந்தித்துவருகிறது. அதனால், இலங்கையின் வெளிநாட்டுக் கடன்கள் அதிகரித்ததற்கு ஏற்றுமதிச் செலவுக்கும், இறக்குமதிச் செலவுக்கும் இடையே பாரிய வேறுபாட்டையும் முக்கியக் காரணமாகக் குறிப்பிடலாம். இதனால், 500 கோடி டாலர்களுக்கும் அதிகமான நஷ்டம் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் கணித்திருக்கிறார்கள்.

இவ்வளவு சரிவுகளைச் சந்தித்துக்கொண்டிருந்தபோதிலும், கடந்த மாதம் வரைக்கும் இலங்கை மத்திய வங்கி, ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியை 202 ஆகவே தொடர்ந்து பேணுவதாகவும், எந்தக் காரணத்துக்காகவும் அதை மாற்றப்போவதில்லை என்றும் அறிவித்தது. அந்தக் காலகட்டத்தில் ஒரு டாலரின் பெறுமதி இலங்கை மத்திய வங்கியில் 202 ஆக இருந்தபோது, கறுப்புச் சந்தையில் ஒரு டாலருக்கு 240 ரூபாயைப் பெற்றுக்கொண்டிருந்ததும் நடந்தது. அதனால், மக்களும் வர்த்தக நிறுவனங்களும் தம்மிடம் இருந்த டாலர்களை மாற்றுவதற்குக் கறுப்புச் சந்தையை நாடத் தொடங்கினர். தொடர்ந்து, இலங்கை மத்திய வங்கியில் டாலரின் தட்டுப்பாடு அதிகரிக்கத் தொடங்கியது. மத்திய வங்கியானது சந்தைப் போக்குகளைக் கண்டறிந்து, அதற்கேற்ப டாலரின் பெறுமதியைத் தீர்மானிப்பதற்கு அப்போதே அனுமதித்திருந்தால், ரூபாயின் பெறுமதி இந்த அளவு வீழ்ச்சியடைந்திருக்காது. இலங்கை மத்திய வங்கிக்குத் தொலைநோக்குப் பார்வை இல்லை என்பதையே இது வெளிப்படுத்துகிறது.

இன்று ஒரு டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி முந்நூறைக் கடந்துள்ளது. ஆகவே, இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை நாளுக்கு நாள் படுவேகமாக, பல மடங்கு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அவ்வாறே, இலங்கை அரசாங்கம் மீளச் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களின் ரூபாய் பெறுமதியும் அதிகரித்துவருகிறது. இவ்வாறான அதிகரிப்புகள் அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டத்திலும் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இந்தச் சுமைகள் அனைத்தையும், தொலைநோக்குப் பார்வையற்ற அரசாங்கத்தின் பொருளாதார நிர்வாகக் குறைபாட்டின் பிரதிபலனையும் பொதுமக்கள்தான் சுமக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.