புத்தளத்தில் வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள ஆண்!

0
61


புத்தளத்தில் உள்ள வீடொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ஆண் நபரின் சடலம் இன்று திங்கட்கிழமை (28-03-2022) புத்தளம்– மதுரங்குளி ஸ்ரீமாபுரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்தே மீட்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவத்தில் மதுரங்குளி ஸ்ரீமாபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற மதுரங்குளி பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அத்துடன், சம்பவ இடத்திற்கு வருகை புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் எம்.எம்.இக்பால், சடலத்தை பார்வையிட்டதுடன், நீதிவான் விசாரணைகளையும் நடத்தினார். அத்துடன் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த இளம் குடும்பஸ்தர் மூன்று நாட்களுக்கு முன்பு உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை, இது ஒரு கொலையாக இருக்கலாம் என சடலமாக மீட்கப்பட்டவரின் குடும்பத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ள போதிலும், பிரேத பரிசோதனையின் பின்னர் இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் தெரிவிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் போதைப் பாவனைக்கு அடிமையாகியிருந்த நிலையில், சில வருடங்களுக்கு முன் தனது முதல் மனைவியை எரித்துக் கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததுடன், அதுதொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

அத்துடன், இவரது இரண்டாவது மனைவி தற்போது தொழில் நிமித்தம் வெளிநாட்டில் உள்ளதாகவும் கூறினர். இந்த சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.