கோட்டாபய ராஜபக்ஷவிற்கு முதுகெலும்பு என்பது கிடையாது! உபுலாங்கனி மாலகமுவ

0
118

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மிகவும் பலவீனமானவர், அவருக்கு முதுகெலும்பு என்பது கிடையாது என வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் உபுலாங்கனி மாலகமுவ தெரிவித்தார்.

நிந்தவூர் பகுதியில் வைத்து நேற்றையதினம்  ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

தொடர்ந்தும்  தெரிவிக்கையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ரொம்ப ரொம்ப பலவீனம் ஆனவர். அவர் இராணுவத்தில் இருந்தார் என்பது வேறு விடயம். அவர் ஏனையோரின் உத்தரவு, அறிவுறுத்தல் ஆகியவற்றுக்கு அமையவே அங்கு செயற்பட்டார் என்பதே உண்மை. அவருக்கு முதுகெலும்பு கிடையாது.

ஆனால் தலைக்கனம் அளவுக்கு மிஞ்சி கிடக்கின்றது. எவருடைய சொல்லையும் கேட்டு நடப்பதாக இல்லை. இந்நாட்டை பீடித்த சாபக்கேடாக பசில் ராஜபக்ஷ இருக்கின்றார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீது நிச்சயமாக ஒரு நன்மதிப்பு இருந்தது. ஆனால் இப்போது அதுவும் இல்லாமல் போய்விட்டது.

நாடு கெட்டு குட்டி சுவராகி கொண்டிருக்கின்றது. ஏதிலிகளாக நாட்டு மக்கள் மாறி கொண்டிருக்கின்றனர். ஆட்சி மாற்றம் ஒன்றே மீட்சிக்கான ஒரே வழி. ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும். இதற்காக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு பொங்கி எழ வேண்டும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அது ஒரு பாசாங்கு நாடகமே. அவர்கள் எதையும் தமிழர்களுக்கு வழங்கப் போவதில்லை.

ஆட்சிக்கு வந்தவுடன் அழைத்து பேசி இருந்தால்கூட ஒரு பேச்சுக்கு அவரை நம்பியிருக்க முடியும். எமது கட்சிக்கு இன, மத, மொழி பேதங்கள் கிடையாது. அனைவரும் இந்நாட்டு மக்களே. அனைவரும் மகிழ்ச்சியாக, நிம்மதியாக, சமாதானமாக வாழ வேண்டும். நாம் வரவுள்ள எந்த தேர்தலாக இருந்தாலும் நிச்சயமாக நாடளாவிய ரீதியில் போட்டியிடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.