மோட்டார் சைக்கிளும் நோயாளர் காவுவண்டியும் விபத்து; பாடசாலை மாணவி பலி

0
55

மோட்டார் சைக்கிளும் நோயாளர் காவு வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் தியத்தலாவைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியத்தலாவ நில அளவை காரியாலயத்துக்கு முன்னால் நேற்று இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் தியத்தலாவைப் பொலிஸார் தெரிவிக்கையில், “மோட்டார் சைக்கிளும் நோயாளர் காவு வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த 17 வயதுடைய மாணவி, தியத்தலாவை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவியே மரணமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளைச் செலுத்திய 29 வயதுடைய நபர் தியத்தலாவை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பண்டாரவளை வைத்தியசாலையிலிருந்து நோயாளியை ஏற்றிக்கொண்ட காவு வண்டி தியத்தலாவை வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருக்கையில் அந்தக் காவு வண்டியை மோட்டார் சைக்கிள் முந்திச் செல்ல முற்பட்டபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.நோயாளர் காவு வண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன” இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.