பிரித்தானியாவில் தஞ்சம் புகுந்துள்ள உக்ரைன் மக்கள்: கைகொடுக்கும் பிரித்தானியா

0
394

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதலில் இருந்து தப்பித்து பிரித்தானியாவில் தஞ்சம் புகுந்துள்ள 20,000 குடும்பங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கான விசா வழங்கபட்டு இருப்பதாக பிரித்தானியாவின் உள்விவகாரத்துறை தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தீவிர தாக்குதலில் இருந்து உயிர்களை பாதுகாத்து கொள்வதற்காக சுமார் 3.7 மில்லியன் மக்கள் வெளியேறி இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உக்ரைனை விட்டு வெளியேறிய பொதுமக்கள் போலந்து, ருமேனியா, ஹங்கேரி மற்றும் ஸ்லோவாகியா ஆகிய நாடுகளில் அகதிகளாக குடியேறி வருகின்றனர், மேலும் சிலர் பிரித்தானியா அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் அகதிகளாக குடியேறி வருகின்றனர்.

ஆரம்பம் முதலே உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு பிரித்தானியா எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், ரஷ்யாவின் போர் நடவடிக்கையை எதிர்த்து அந்த நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகளையும், உக்ரைன் மக்களுக்கான உதவிகளையும் தொடர்ந்து பிரித்தானியா மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில், தற்போது, உக்ரைனில் இருந்து பிரித்தானியாவிற்கு வந்துள்ள 20,000 உக்ரைனிய குடும்பங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கான விசா உரிமையை இன்று(வியாழக்கிழமை) வழங்கியுள்ளது.

இதுகுறித்து பிரித்தானியாவின் உள்விவகாரத்துறை வெளியிட்டுள்ள குறிப்பில், உக்ரைனில் இருந்து பிரித்தானியாவிற்கு வந்துள்ள 20,100 குடும்பங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கான விசா அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த விசா நடைமுறையை கொண்டு உக்ரைனியர்கள் பிரித்தானியாவில் மூன்று ஆண்டுகள் வரை எந்த தடையும் இன்றி பணிபுரியவும், கல்வியை தொடரவும் வழிசெய்து இருப்பதாக அறிவித்துள்ளது.

மேலும், இந்த விசா நடைமுறையை பெறுவதற்கான இணையதள முகவரியையும் பிரித்தானிய உள்விவகாரத்துறை வழங்கியுள்ளது.

இந்த நிலையில், இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், ரஷ்ய ஜனாதிபதி புடினின் அத்துமீறிய தாக்குதலில் சொந்த நாட்டை விட்டு வெளியேறியுள்ள உக்ரைன் மக்களுக்கு பிரித்தானியா முடிந்த அளவு தனது உள்ளுணர்வுடன் செயல்படுகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் 20,000 குடும்பங்களுக்கு விசா அனுமதி வழங்கி இருப்பது அற்புதமான செய்தி என தெரிவித்துள்ளார்.