சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஈஸ்டர் தாக்குதல்- சந்தேக நபர்கள் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு!

0
371

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 16 பேருக்கு, இரண்டரை வருடங்களின் பின்னர், சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகே முன்னிலையில், நேற்றைய தினம் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு கோடி ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல நீதிவான் உத்தரவிட்டுள்ளார். அதேநேரம், சந்தேக நபர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை விதித்துள்ள நீதிமன்றம், பிணையாளர்கள் நெருங்கிய உறவினர்களாக இருக்க வேண்டும் என்றும் பிணை நிபந்தனை விதித்துள்ளது.

அதுமட்டுமன்றி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், காலை 9 மணிமுதல் மதியம் 12 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறும், நீதிமன்றம் சந்தேக நபர்களுக்கு அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேக நபர்கள், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் காத்தான்குடி முதலான பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட பயிற்சி முகாம்களில், ஆயுதப் பயிற்சி உட்பட, ஐ.எஸ். அடிப்படைவாதம் தொடர்பிலான பயிற்சிகளில் பங்கேற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதென, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.