இரசாயன குண்டுகளை வீச தயாராகும் ரஷ்யா! திணறும் புடின்

0
473

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரில் எந்த நேரத்திலும் ரஷ்யா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான அபாயம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர முடியாமல் திணறும் ரஷ்ய அதிபர் புடின், இவ்வாறு இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தலாம் என குறிப்பிடப்படுகின்றது.  

இந்த போரை மே 9ஆம் திகதிக்குள் முடித்து விட  புடின் அவர் தீவிரமாக இருக்கிறார். அதே நேரம், இரசாயன ஆயதங்களை பயன்படுத்தினால் நேட்டோ படைகள் பதிலடி கொடுக்கும் என அமெரிக்க அதிபர் பைடன் எச்சரித்துள்ளார்.

உக்ரைன் மீது கடந்த மாதம் 24ம் திகதி போர் தொடுத்த ரஷ்ய ராணுவம் தொடர்ந்து 30வது நாளாக நேற்றும் சண்டையிட்டு வருகிறது.

மரியுபோல், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில் பயங்கர குண்டுவீசி சர்வநாசம் செய்த ரஷ்ய படைகள், தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சியில் கடந்த 10க்கும் மேற்பட்ட நாளாக ஈடுபட்டுள்ளன.

ஆனால், தலைநகருக்குள் நுழைய விடாமல் உக்ரைன் ராணுவம் பலமான எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக இர்பின், புச்சா, ஹோஸ்டோமெல் போன்ற புறநகர்களை சுற்றி வளைத்த ரஷ்ய ராணுவம் தலைநகர் கீவ் நோக்கி முன்னேறுவதில் திணறி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன், மகாரிவ் புறநகரை ரஷ்யாவிடமிருந்து மீட்ட உக்ரைன் ராணுவம் தற்போது லுக்யானிவ்கா புறநகரை தங்கள் வசம் கொண்டு வந்துள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின.

அங்கு நடந்த போரில் ரஷ்யாவின் பீரங்கிகள் தகர்க்கப்பட்டுள்ளன. சண்டையில் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய பீரங்கிகளுக்கு அருகே உக்ரைன் ராணுவ வீரர்கள் நிற்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

இதே போல், புச்சா, இர்பின் மற்றும் போராட்யான்கா போன்ற புறநகர் பகுதியிலும் உக்ரைன் ராணுவம் தொடர்ந்து எதிர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதனால், தலைநகர் கீவ்வை சுற்றி 35 கிமீ தொலைவுக்கு ரஷ்ய படைகள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளதாக இங்கிலாந்து ராணுவ உளவுத்தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதே போல், செர்னோபிள் அணு மின் நிலைய பணியாளர்கள் வசித்து வரும் ஸ்லாவுட்டிச் நகரில் ரஷ்ய படையின் தாக்குதலை முறியடித்திருப்பதாக உக்ரைன் ராணுவம் கூறி உள்ளது. நகரின் எல்லைக்கு அப்பால் ரஷ்ய படைகள் விரட்டப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெர்ட்யான்ஸ்க் துறைமுக நகரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்ய போர்க்கப்பல் ஒன்றையும் உக்ரைன் ராணுவம் தாக்கி அழித்துள்ளது. அக்கப்பலில் இருந்து கரும் புகைகள் வெளிவரும் வீடியோக்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இதனால் தலைநகரை கைப்பற்ற முடியாத பட்சத்தில் ரஷ்ய படைகள் அடுத்ததாக ஓடேசா துறைமுக நகரத்தையும், மைகோலவ் நகரத்தையும் கடுமையாக தாக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் தொடர்ந்து ஆயுத உதவி செய்து வருவதால் இப்போரில் ரஷ்யாவிடம் சரணடையாமல் ஒருமாதத்திற்கும் மேலாக உக்ரைனால் சமாளிக்க முடிகிறது.

ஆனாலும், நேற்றும் பல நகரங்களில் குண்டுகளை வீசி ரஷ்யா நாசம் செய்தது. டெனிபிரோ நகரில் உக்ரைன் ராணுவ முகாம் மீது 2 ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் 4 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்போரில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து பயங்கரமான ஏவுகணைகளை வீசி வருகிறது.

ஏற்கனவே பாஸ்பரஸ் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. இந்நிலையில், இந்த போரை மே மாதம் 9ம் தேதிக்குள் முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ள புடின், உக்ரைன் மீது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தும் அபாயம் உருவாகியுள்ளது.

இதற்கிடையே, பிரசஸ்ல்சில் நடந்த நேட்டோ மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ‘‘உக்ரைன் மீது ரசாயன குண்டுகளை ரஷ்யா வீசினால், இவ்விவகாரத்தில் நேட்டோ நிச்சயம் தலையிடும்’’ என எச்சரித்துள்ளார்.

இதனால், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஆபத்தான கட்டத்தை நோக்கி செல்லும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

இதற்கிடையே, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், உக்ரைனின் தங்களின் முதல்கட்ட திட்டம் வெற்றிகரமாக முடிந்திருப்பதாகவும், அடுத்ததாக ஒட்டுமொத்த உக்ரைனையும் குறிவைக்கும் திட்டம் குறித்து பரிசீலிப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மரியுபோல் தியேட்டரில் 300 பேர் பலியானது உறுதி கடந்த 16ம் தேதி, மரியுபோல் நகரில் தியேட்டர் ஒன்றின் மீது ஏவுகணை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியது. அந்த சமயத்தில், தியேட்டரில் பொதுமக்கள், குழந்தைகள் என 1300 பேர் தஞ்சமடைந்திருந்தனர்.

இந்த தாக்குதலில் தியேட்டர் மொத்தமும் வெடித்து சிதறி தரைமட்டமானது. நூற்றுக்கணக்கான மக்கள் இடிபாடுகளில் புதைந்து பலியாகி இருக்கலாம் என அஞ்சப்பட்டது.

அங்கிருந்து 130 பேர் வரை மீட்கப்பட்ட நிலையில், 300 பேர் பலியாகி இருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர். உக்ரைன் அரசின் டெலிகிராம் செய்தியில் இத்தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் மீட்பு பணிகள் முழுமையாக முடிந்து விட்டதா என்ற தகவல் இல்லை.

ரஷ்ய ஆயுதங்கள் வெத்து வேட்டு உக்ரைன் போரில் ரஷ்யாவின் 60 சதவீத அதிநவீன ஆயுதங்கள் இலக்கை துல்லியமாக தாக்கவில்லை என பெயர் வெளியிடாத அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

வெத்து வேட்டான ஆயுதங்களால்தான் உக்ரைனை வீழ்த்த முடியாமல் ஒரு மாதமாக ரஷ்யா திணறி வருவதாக அவர்கள் கூறி உள்ளனர்.

தினசரி ரஷ்யா ஏவும் ஏவுகணைகள், பீரங்கி தாக்குதலில் பல இலக்கை தாண்டி வேறெங்கோ சென்று விழுவதாக கூறப்படுகிறது. அதிகபட்சமாக சில நாட்களில் ரஷ்யாவின் பாதிக்கு பாதி ஆயுதங்கள் தோல்வி அடைவதாகவும் கூறி உள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் விரைவில் சேருங்கள்: ஜெலன்ஸ்கி பிரசல்ஸ்சில் நடந்த நேட்டோ நாடுகள் மாநாட்டில் காணொலி மூலமாக பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ‘‘உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி, ரஷ்யாவுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால், இதை முன்கூட்டியே செய்திருந்தால், ரஷ்யா போர் நடத்த ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்திருக்கும். இனியும் தாமதிக்காமல், ஐரோப்பிய ஒன்றியத்தில் எங்களை இணைக்கும் நடவடிக்கையை உடனடியாக செய்து தர வேண்டும்’’ என்றார்.

ஆயுத உதவி செய்ய வேண்டுமென்ற ஜெலன்ஸ்கியின் கோரிக்கையை நேற்று முன்தினம் ஹங்கேரி பிரதமர் விக்டர் நிராகரித்தார். இது குறித்து பேசிய ஜெலன்ஸ்கி, ‘‘மரியுபோலில் என்ன நடக்கிறது என்பதை பாருங்கள். நீங்கள் யார் பக்கம் என்பதை தீர்மானியுங்கள்’’ என கூறி உள்ளார்.