முற்றாக சிதைக்கப்பட்ட மரியுபோல் நகரம்! பட்டினியால் வாடும் மக்கள்

0
68

உக்ரைனின் முக்கிய துறைமுக நகரம் ரஷ்ய துருப்புகளால் 90% அளவுக்கு சிதைக்கப்பட்டுள்ளதாகவும் அங்குள்ள மக்கள் பட்டினியால் சாவின் விளிம்பில் சிக்கியுள்ளதாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன்ன் துறைமுக நகரமான மரியுபோலை ரஷ்ய துருப்புகள் சுற்றிவளைத்து கண்மூடித்தனமாக தாக்கி வருகிறது. இதுவரை 90% அளவுக்கு ரஷ்ய துருப்புகளால் மரியுபோல் நகரம் சிதைக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்ய தாக்குதலுக்கு அஞ்சி நாடக அரங்கம் ஒன்றில் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீது முன்னெடுத்த தாக்குதலில் சுமார் 300 பேர்கள் கொத்தாக கொல்லப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தரும் தகவல் வெளிவந்துள்ளது.

மேலும், ரஷ்ய துருப்புகள் சுற்றிவளைத்துள்ள நிலையில், வெளியேற முடியாமல் இன்னமும் 100,000 மக்கள் அந்த நகரில் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்தும் வாரங்களாக முடக்கப்பட்டுள்ளதால், மக்கள் பட்டினியால் சாகும் நிலையில் உள்ளனர்.

ரஷ்ய துருப்புகளின் தாக்குதலுக்கு இலக்கான நாடக அரங்கில் மேலும் 600 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் எனவும் அவர்களை மீட்க முடியுமா என்பது சந்தேகமே எனவும் கூறப்படுகிறது.

மேலும் குண்டுவீசி தாக்கப்பட்ட மகப்பேறு மருத்துவமனையில் 400 பேர் சிக்கியிருக்கலாம் எனவும் அவர்கள் தொடர்பிலும் எந்த செய்தியும் இல்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, ரஷ்ய படையெடுப்பு 30 நாட்களை கடந்துள்ள நிலையில், இதுவரை 16,000 வீரர்களை ரஷ்ய தரப்பு இழந்துள்ளதாக உக்ரைன் நேற்று குறிப்பிட்டுள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்புக்கு ரஷ்யா அனுப்பிய 115 முதல் 120 பட்டாலியன்களில் 20 படைகள் போர் செயல்திறன் ஏதும் இல்லாதவர்கள் என்று ஒரு மேற்கத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.