காசல்ரீ நீர்த்தேக்கத்தில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது!

0
59

காசல்ரீ நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பு பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 8 பேரை ஹட்டன் விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

ஹட்டன் விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரேமலால் தலைமையில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த 8 பேரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு சில உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் சந்தேகநபர்கள் மஸ்கெலியா, நோர்வூட், பொகவந்தலாவ, ஹட்டன் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் 8 பேரையும் இன்றைய தினம் ஹட்டன் நீதவான் முன்னிலையில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.