நாட்டில் தமிழ் மக்கள் இன்னும் இராணுவத்தின் அடக்குமுறைக்குள்ளேயே வாழ்கின்றனர்- தம்பிராசா செல்வராணி

0
478

இந்த நாட்டில் தமிழ் மக்கள் இன்னும் இராணுவத்தின் அடக்குமுறைக்குள்ளேயே வாழ்கின்றனர். இன்னும் ஏன் இந்த உலக நாடுகள் எங்களைக் கண்நோக்கிப் பார்க்காமல் இருக்கின்றன என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க அம்பாறை மாவட்டத் தலைவியும் கிழக்கு மாகாண இணைப்பாளருமான தம்பிராசா செல்வராணி கேள்வியெழுப்பியுள்ளார்.

யாழ்.மட்டுவிலில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு ஏற்படுத்தப்பட்ட கொடுமை தொடர்பில் கண்டனம் வெளியிடும் முகமாக இன்றையதினம் மட்டக்களப்பில் உள்ள மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் யாழ்.மட்டுவிலில் இலங்கை பொலிஸார் அத்துமீறி எமது உறவுகள் மீது கொடுமையான அநியாயமான செயல்களைச் செய்துள்ளார்கள்.

எமது உறவுகள் சொல்ல முடியாத இடங்களில் எல்லாம் அடித்து, மிதித்து, தலைமுடிகளைப் பிய்த்துச் செய்த அந்தக் கொடுமையினை வடக்கு, கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கங்கள் வன்மையாகக் கண்டிக்கிறன.

யாழ்ப்பாணத்தில் மகிந்த ராஜபக்சவை சந்தித்து அவர்களிடம் நாங்கள் ஒப்படைத்த உறவுகள் எங்கே என்று கேட்பதற்காகவே அங்கு சென்றிருந்தோம்.

ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுக்குள் மறித்து சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் அந்த வயது முதிர்ந்த தாய்மார்களை அந்த வாகனத்திற்குள் அடைத்துச் சுற்றி வளைத்ததோடு மாத்திரமல்லாமல் அவர்களிடம் மிக அராஜகமான முறையில் செயற்பட்டிருந்தார்கள்.

அவ்வாறு அராஜகமான முறையில் செயற்பட்ட அந்த பொலிஸார் அவ்விடத்தில் அவர்களின் தாய்மாரை, சகோதரிகளை மிதித்துத் துவைத்திருப்பார்களா? அவர்களது தாய், சகோதரி, மனைவிகளை நினைவில் கொண்டிருந்தால் வயதிலும் மூத்த தாய்மாருக்கு அவ்வாறு செய்திருக்கமாட்டார்கள்.

பொலிஸ் பெண்களும் தங்களது சகோதரிகளை, தாயை நினைத்திருந்தால் சக பெண்களுக்குத் தகாத இடத்தில் அடித்து சித்திரவதை செய்வதற்கு விட்டிருக்கமாட்டார்கள். இவ்வாறான செயற்பாடுகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இன்று ஐநாவில் 49ஆவது கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையிலே இவ்வாறான நிகழ்வுகள் நடந்துள்ளன. இதனையும் ஐநா சபை பராமுகமாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றது.

எமது சங்கத்தின் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டத் தலைவிகளுக்கு ஏற்படுத்தப்பட்ட சித்திரவதைகளின் போதும், எமது தாய்மாருக்கு ஏற்பட்ட கொடுமைகளின் போதும் அவர்களின் கதறல் அந்தப் பொலிஸாரின் காதுகளுக்குக் கேட்கவில்லையா? எமது உறவுகள் அங்கு ஏன் சென்றார்கள்.

தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதியாக இருக்கும் போதே எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை அவர்களிடம் ஒப்படைத்திருந்தார்கள். அவர் யாழ்ப்பாணம் வந்திருந்தமையால் அவரிடம் சென்று தங்கள் உறவுகள் எங்கே என்று கேட்பதற்காகவே சென்றிருந்தார்கள்.

வேறு எதற்கும் அவர்கள் அங்கே செல்லவில்லை. அது மாத்திரமல்ல காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குழு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான செயற்குழு என்பனவற்றின் சந்திப்புடன் ஏனைய நாட்டின் பிரதிநிதிகளையும் சந்திப்பதற்காக எமது வவுனியா மாவட்டச் செயலாளர் ஜெனீவாவிற்குச் செல்ல இருந்த வேளையில் அவருக்கான வீசா மறுக்கப்பட்டது.

அதேநேரம் தெற்குப் பிரதேசத்திலிருந்து அனைத்து உறவுகளுக்கும் வீசா வழங்கப்பட்டது. அவர்கள் அங்கு சென்றிருந்தார்கள். எமது உறவுகளின் பிரச்சனைகளை நாங்கள் ஐநா முன்றலில் சென்ற கதைப்பதற்கு எங்களுக்கு எவ்வளவு தடைகளை விதித்திருந்தார்கள்.

உக்ரைனில் நடைபெற்ற சம்பவங்களைப் பரிதாபமாகப் பார்க்கின்ற இந்த உலக நாடுகள். இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது எங்களது இனமே அழிந்திருந்தது. சுமார் ஒரு இலட்சத்து நாற்பத்தேழாயிரத்திற்கும் மேற்பட்ட உறவுகள் அங்கு அழிந்திருந்தது. அப்போது ஏன் எங்கள் மீது பாராமுகமாக இருந்தன.

அங்கு அழிவதும் உயிர்தான், இங்கு அழிக்கப்பட்டதும் உயிர்தான். இன்றும் வீதிகளில் நின்று நாங்கள் எங்கள் உறவுகளைத் தேடிக்கொண்டிருக்கின்றோம். அதேநேரம் மட்டுவிலில் எமது உறவுகளுக்கு நடந்த கொடுமையையும் இன்று ஐநா பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றது. ஐநா எங்களது விடயத்தில் பாராமுகமாகச் செயற்படுகின்றது.

இலங்கை அரசின் சொல்லைக் கேட்டு எங்களை முன்னின்ற பார்க்கவில்லை என்று எங்களுக்குத் தோணுகின்றது. நாற்பது ஆண்டுகாலமாக இராணுவக் கெடுபிடிக்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் நாங்கள் இன்னும் அத்தகைய இராணுவக் கெடுபிடிக்குள்ளே தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

எங்களது உயிர்களைக் கொல்லவில்லையா? எங்களது பெண்களைக் கற்பழிக்கவில்லையா? எங்களது சிறு பாலகர்களைத் தீயில் தூக்கி எறியவில்லையா? எங்களைக் குழுக் குழுவாகக் கொல்லவில்லையா? எத்தனையே ஆயிரக்கணக்கான எங்கள் உறவுகளைக் காணாமல் ஆக்கச் செய்யவில்லையா? இன்றும் நாங்கள் அவ்வாறான இராணுவ கெடுபிடிக்குள் தான் இருக்கின்றோம்.

இன்னும் ஏன் இந்த உலக நாடுகள் எங்களைக் கண்நோக்கி பார்க்காமல் இருக்கின்றன. இந்த ஐநா சபையில் 2018ஆம் ஆண்டிலிருந்து நாங்களே நேரில் சென்று எங்களது உறவுகளைக் கையளித்த விடயத்தைத் தெரிவித்திருக்கின்றோம்.

நாங்கள் இன்று கண்ணீர் விட்டுக் கொண்டிருப்பது அவர்களுக்குக் கேலிக் கூத்தாக இருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்சவிற்கும், அவரது தம்பியார் கோட்டாபய ராஜபக்சவிற்கும் தெரியும் எங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது? அவர்கள் எங்கே வைக்கப்பட்டிருக்கின்றார்கள்?

அவர்களுக்கு என்ன செய்தார்கள் என்று அவர்களுக்குத் தெரியும். நாங்களும் அதைத்தான் கேட்கின்றோம். எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது. எங்கள் உறவுகளை எங்கே வைத்திருக்கின்றீர்கள், எங்கள் உறவுகளின் உண்மை நிலையைக் கூறுங்கள் என்றுதான் நாங்கள் கேட்கின்றோம்.

அதைக் கேட்கச் சென்ற உறவுகளுக்குத் தான் அவ்வாறான கொடுமைகள் நடந்திருக்கின்றது. மட்டுவிலில் எமது உறவுகளுக்கு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கொடுமையை ஐநா சபை விசாரணை செய்ய வேண்டும்.

அவர்கள் பிரதமரைச் சந்திக்கத்தான் சென்றிருந்தார்கள். அவர்கள் மீத பழிக்குற்றம் போட்டு, அவர்களைப் பேருந்துகளில் அடைத்து சித்திரவதை செய்துள்ளார்கள். இது இறுதியும் அறுதியுமாக இருக்க வேண்டும். நாங்கள் ஆயுதமேந்திப் போராட வரவில்லை.

எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையைக்கேட்டு நிற்கின்றோம். நான் எனது கணவனை இறுதி யுத்தத்தின் போது உயிருடன் தான் கையளித்தேன். அதேபோலத் தான் எமது தாய்மார் தங்கள் உறவுகளைக் கையளித்தார்கள்.

இன்று எமது உறவுகளுக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாது. எமது மக்கள் அவ்வாறு கதறும் போது யாரும் அதனைப் பார்க்கா வண்ணம் இருந்தது எமக்கு மிக மனவேதனையாக இருந்தது.

நாங்கள் போராடுவது எமது சமூகத்திற்காக. அது இந்த நாட்டில் வாழும் மூவின மக்களுக்கும் நன்மையாகவே அமையும். எமது உறவுகளின் உண்மை நிலை தெரியும் வரை எமது போராட்டம் தொடரும் எமது போராட்டத்தை ஐநா மாத்திரமல்லாமல் சர்வதேச நீதிமன்றத்திற்கும் எடுத்துச் செல்வோம்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.