சுகாதார வழிமுறைகளை மறந்துள்ள மக்கள் !சுகாதாரப்பிரிவு எச்சரிக்கை

0
283

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக மக்கள் சுகாதார வழிமுறைகளை மறந்துள்ளதாக சுகாதார பிரிவினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

எரிபொருள், எரிவாயு மற்றும் பால் மாவுக்காக வரிசையில் நிற்கும் மக்கள் சுகாதார பழக்கத்தை மறந்து விட்ட நிலைமைக்கு மத்தியில் அடுத்த மாதம் மீண்டும் கோவிட் பரவும் அபாயம் உள்ளதென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் குடும்பநல வைத்திய நிபுணர் மல்காந்தி கல்ஹேன நேற்று ஊடகங்களிடம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மிகவும் சிறந்த முறையில் கொரோனாவை கட்டுப்படுத்திய பிரித்தானியா, சீனா உள்ளிட்ட நாடுகள் பலவற்றில் ஒமிக்ரோனின் ஆபத்தான திரிபு பரவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூகத்தில் கோவிட் தொற்று குறைவாக இருந்தாலும், இது மீண்டும் எப்போது உயரும் என்று சொல்ல முடியாது.

இந்த நாட்களில் மக்கள் எரிபொருள், எரிவாயு மற்றும் பால் மா வரிசையில் நிற்கிறார்கள். சிலர் முகக் கவசம் கூட அணிவதில்லை. குழுவாக கூடி நின்று பேசுகின்றார்கள்.

மக்கள் பல சுகாதார பழக்கங்களை மறந்துவிட்டனர். இப்படியே போனால், எதிர்வரும் ஏப்ரல் இறுதிக்குள், கோவிட்டின் கடுமையான அலை உருவாகலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.