நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை அடுத்த வாரத்திற்குள் தீர்க்கப்படும்! – நிதி அமைச்சர்

0
267

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார நெருக்கடி அடுத்த வாரத்திற்குள் தீர்க்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று இரவு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி பெறப்பட்டுள்ளதாகவும், அந்த தொகையில் எரிபொருளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசியப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் கைத்தொழில்களுக்குத் தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 1500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாகப் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எரிவாயு இறக்குமதிக்காக டொலர்களை வழங்குவதற்கு மத்திய வங்கி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அதற்கமைய, எரிவாயு இறக்குமதிக்கான கடன் கடிதங்களை திறக்கும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

எரிபொருள் மற்றும் எரிவாயு இறக்குமதியின் மூலம் நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு, எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி அடுத்த வாரத்திற்குள் தீர்க்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.