எரிபொருளை சேமித்து வைத்துள்ள மக்கள் பெரும் நஷ்டத்தை எதிர்கொள்வார்! – சாகர ரத்நாயக்க

0
375

நாட்டின் எரிபொருள் விலைகள் எதிர்காலத்தில் குறையும் எனவும் இதனால், எரிபொருளை சேமித்து வைத்துள்ள மக்களுக்கு பெரிய நஷ்டத்தை எதிர்நோக்க நேரிடும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

“கடந்த காலத்தில் நஷ்டத்தை ஏற்படுத்திக்கொண்டு மக்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டதுடன் அந்த நஷ்டத்தை ஈடு செய்த பின்னர், விரைவில் மானிய விலையில் மக்களுக்கு எரிபொருளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

தேவையான எரிபொருள் தொகை எவ்வித தட்டுப்பாடும் இன்றி நாட்டிற்குள் இருக்கின்றது. மக்கள் எரிபொருளை சேகரித்து அதனை மீண்டும் விற்பனை செய்யும் வர்த்தகத்தை மேற்கொண்டு வருவதன் காரணமாக எரிபொருள் இல்லாத நிலைமை உருவாகியுள்ளது.

முன்னர் ஒரு எரிபொருள் கொள்கலன் வண்டியின் மூலம் விநியோகிக்கப்படும் எரிபொருள் இரண்டு நாட்களுக்கு போதுமானதாக இருந்ததுடன் தற்போது ஐந்து மணி நேரத்தில் முடிந்து விடுகிறது.

முன்னர் 50 லீற்றர் எரிபொருளை கொள்வனவு செய்யும் நபர் தற்போது நாள் ஒன்றுக்கு 250 லீற்றர் எரிபொருளை கொள்வனவு செய்து சேமித்து வைக்கின்றார்” எனவும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.