இலங்கையில் அப்போது 13 மில்லியன் மக்கள் வாழ்ந்த போது காணப்பட்ட அதே நெருக்கடி தற்போது 20 மில்லியன் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது!

0
69

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியானது 1970ஆம் ஆண்டுகளில் முகங்கொடுத்ததைப் போன்றது என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டபிள்யூ.ஏ.விஜேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

1970ஆம் ஆண்டுகளில் காணப்பட்டதனை போன்ற பற்றாக்குறை மற்றும் வரிசைகளை தற்போது இலங்கை எதிர்கொள்வதாக விஜேவர்தன கூறியுள்ளார்.

1970ஆம் ஆண்டுகளில் விடியற்காலையில் நூற்றுக்கணக்கான மக்கள் பாண் வரிசையில் காத்திருக்கின்றார்கள். வயதான ஆண்களும் பெண்களும் குப்பைகளில் உணவு தேடியுள்ளார்கள்.

கிராமப்புறங்களில் காய்கறிகள் மற்றும் அரிசியை திருடர்கள் திருடிச் சென்றுள்ளார்கள். இலங்கையில் அப்போது 13 மில்லியன் மக்கள் வாழ்ந்த போது காணப்பட்ட அதே நெருக்கடி தற்போது 20 மில்லியன் மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

1970ஆம் ஆண்டு நியூயோர்க் டைம்ஸ் சஞ்சிகையில் வெளியான அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்களை ஒப்பிட்டு இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டபிள்யூ.ஏ.விஜேவர்தன தகவல் வெளியிட்டுள்ளார்.

அந்த கட்டுரைக்கமைய, 13 மில்லியன் மக்கள் வாழ்ந்த தேசத்தில் பாரிய உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. பணவீக்கத்தால் நாடு திணறியது. அதே திணறலை தற்போது இலங்கை எதிர்கொண்டுள்ளது.

அந்த காலப்பகுதியில் மக்கள் உயிர்வாழ போராடினார்கள். ஒரு பாண் கொள்வனவு செய்வதற்கு மக்கள் போராடினார். அணிவதற்கு ஆடையின்றி கிடைக்கும் துணிகளை சுற்றிக் கொண்டார்கள். பசியின் கொடுமையை மக்கள் அனுபவித்தார்கள்.

தவறான விவசாயமே இலங்கையின் அப்போதைய இந்த அவல நிலைக்கு அடிப்படைக் காரணமாக காணப்பட்டுள்ளது.

சர்வதேசத்தின் தேவைக்கமைய செயற்பட முயற்சித்து ஒரு நல்ல நாடு பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. தற்போதைய அரசாங்கம் கடந்த கால படிப்பினைகளை ஒரு பாடமாக எடுத்துக் கொளள்வில்லையா என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டபிள்யூ.ஏ.விஜேவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.

சமகால அரசாங்கத்திலும் அத்தியாவசிய பொருட்களை பெற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதுடன், உயிரிழப்புகளும் பதிவாகி உள்ளன. 

இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றப் போவதாக ராஜபக்ஷ சகோதரர்கள் தேர்தல் களத்தில் சூளுரைத்தார்கள். அதற்கமைய 69 இலட்சம் என்ற பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். 

அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மக்களை நடுத்தெருவில் அலைய விட்டுள்ளதாக, நீண்ட வரிசையில் காத்திருக்கும் பலர் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.