ஆண் ஒருவரை தீயில் எரித்து உயிரிழக்கச் செய்த சம்பவம் ! சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைப்பு

0
70

மட்டக்களப்பு – ஆரையம்பதி செல்வநகர் பகுதியில் ஆண் ஒருவரை தீயில் எரித்து உயிரிழக்கச் செய்த சம்பவம் தொடர்பாகச் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட அவரது மகள், மருமகன் இருவரையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஆரையம்பதி – செல்வநகரைச் சேர்ந்த முன்னாள்  பொலிஸ் உத்தியோகத்தரும் தனியார் வங்கி ஒன்றின் பாதுகாவலராகக் கடமையாற்றி வந்தவருமான 54 வயதுடைய சடாச்சரலிங்கம் ஜீவநாயகம் என்பவரே சிகிச்சை பலனின்றி 19 ஆம் திகதி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மதுபோதையில் தினமும் மனைவியுடன் சண்டையிட்டுக் கொண்டு தனக்கு தானே தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைப்பதாக மிரட்டிவந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவதினமான கடந்த 18ஆம் திகதி இரவு இவ்வாறே மனைவியுடன் சண்டையிட்டு தனக்கு தானே மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைக்கப் போவதாக மிரட்டியபோது அங்கு வந்த மகன், மகள் மற்றும் மருமகன் கோபம் கொண்ட நிலையில் தீயைப் பற்றவைத்து அவர் மீது எறிந்துள்ளனர்.

தீ பற்றியமையால் எரிந்து படுகாயமடைந்த நிலையில் குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் அவரது மனைவி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தீ காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் கடந்த(19) ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் போரில் உயிரிழந்தவரின் மகனான பொலிஸ் உத்தியோகத்தர், அவரது மகள் மற்றும் மருமகன் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இவர்கள் நேற்று பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் அவர்களைக் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களை எதிர்வரும் 4ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.