அம்பாறைக்கு இடமாறப்பட்டுள்ள இளைஞர் சேவை மன்றம்!

0
62

சாய்ந்தமருதுவில் இயங்கி வந்த இளைஞர் சேவை மன்ற கிழக்கு மாகாண அலுவலகம் அம்பாறைக்கு இடமாறப்பட்டுள்ளது. இந்த இடமாற்றம் அம்பாறை மாவட்டத்தின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய ஒப்புதலுடன் தான் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் கிழக்கு மாகாண அலுவலகம் அம்பாறை கச்சேரிக்கு இடமாறப்பட்டுள்ளதால் சகல அரச ரீதியான தொடர்புகளுக்கும் இந்த புதிய முகவரியோடு தொடர்பு கொள்ளுமாறு சகல பணிப்பாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள், பிரதிப் பணிப்பாளர்களுக்கும் தேசிய இளைஞர் சேவை மன்ற பணிப்பாளர் நாயகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர்கள் இந்த விடயத்தை எனது கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றார்கள்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்சவின் அமைச்சின் கீழ் இளைஞர் சேவை மன்றம் உள்ளது. இதுவரை சாய்ந்தமருதுவில் இயங்கி வந்த கிழக்கு மாகாண இளைஞர் சேவை மன்ற அலுவலகத்தை அம்பாறை மாவட்டத்திற்கு இடமாற்றுவதன் காரணம் என்ன? எனக் கேட்க விரும்புகின்றேன்.

மாவட்டத்தின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களதும் ஒப்புதலுடன் தான் இந்த அலுவலக இடமாற்றம் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது.

அரசுக்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கும் அம்பாறை மாவட்டத்தின் நான்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதுவரை இந்த அலுவலக இடமாற்றம் குறித்து எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. எனவே, அம்பாறை மாவட்டத்தின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் இடமாற்றம் இடம்பெற்றது என்று கூறப்படுவது உண்மை என்று நம்பக் கூடியதாக உள்ளது.

இருக்கின்ற வளத்தைப் பாதுகாக்க முடியாது, வேறு பிரதேசங்களுக்கு அனுப்பும் 20 க்கு ஆதரவளித்தோர்களால் முஸ்லிம் சமுகம் வேறு என்ன நன்மைகளைப் பெறப்போகின்றது என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.

பொதுமக்கள் குறிப்பிடுவதைப் போல இவர்கள் கேட்டவை அனைத்தும் அரசினால் ஏற்கனவே இவர்களுக்கு வழங்கப்பட்டு விட்டதால் புதிதாக எதனையும் கேட்க முடியாத நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள் என்பதை உணர முடிகின்றது.

இந்த அரசு எப்படி இனவாதக் கருத்துக்களை முன்வைத்து மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்ததோ அதேபோல இவர்களும் தேர்தல் மேடைகளில் முஸ்லிம் மக்களின் உரிமைக் கோசங்களை முன்வைத்து முஸ்லிம் மக்களை ஏமாற்றி அதிகாரத்திற்கு வந்தார்கள்.

ஆனால் இப்போது நடப்பது என்ன என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டியுள்ளது. இருக்கின்ற இந்த அலுவலகத்தையே பாதுகாக்க முடியாத இவர்கள் வேறு என்ன உரிமையைப் பெற்றுத்தரப் போகின்றார்கள் என்பது குறித்து அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் கவனம் செலுத்த வேண்டும்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.